உத்திரமேரூர் அருகே அரிய வகை சூலக்கற்கள் கண்டெடுப்பு


உத்திரமேரூர் அருகே அரிய வகை சூலக்கற்கள் கண்டெடுப்பு
x
தினத்தந்தி 21 Jun 2021 12:54 AM GMT (Updated: 2021-06-21T06:24:07+05:30)

உத்திரமேரூர் அருகே 15-ம் நூற்றாண்டை சேர்ந்த அரிய வகை சூலக்கற்கள் கண்டெடுக்கப்பட்டது.

உத்திரமேரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ளது திருப்புலிவனம் கிராமம். இந்த கிராமத்தில் உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தினரால் சிவன் கோவிலுக்கு தானமாக வழங்கும் நிலத்தின் எல்லையை குறிக்கும் 15-ம் நூற்றாண்டை சேர்ந்த அரியவகை சூலக்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் கொற்றவை ஆதன் கூறியதாவது:-

. எங்களது கள ஆய்வில் திருப்புலிவனத்தில் இருந்து மருதம் செல்லும் சாலையில் இந்த 2 கற்களை கண்ெடடுத்தோம். இது விஜய நகர மன்னர்களின் காலத்தை சேர்ந்ததாகும். 50 சென்டிமீட்டர் அகலமும் 75 சென்டி மீட்டர் உயரமும் கொண்ட ஒரு கல்லும், அதன் அருகில் 35 சென்டிமீட்டர் அகலமும் 70 சென்டி மீட்டர் உயரமும் கொண்ட மற்றொரு கல்லும் உள்ளது. இந்த கல்லின் இடதுபக்கம் சூல சின்னமும் அதன் கீழ் பன்றி உருவமும் உள்ளது. இது விஜய நகர மன்னர்களின் சின்னமாகும். வலப்பக்கத்தில் பெரிய உருவத்தில் கழுதையும் அதன் கீழ் பெரிய புறா உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது. இது குல சின்னமாக இருக்க வாய்ப்பு உள்ளது.

வியாக்ரபுரீஸ்வரர் கோவில்

மன்னர் காலங்களில் சிவன் கோவிலுக்கு தானமாக வழங்கப்படும் நிலங்களுக்கு அதன் எல்லையை குறிப்பதற்காக 4 திசைகளில் சூல சின்னம் பொறித்த கற்களை நட்டு வைப்பார்கள் இதற்கு சூல கற்கள் என்று பெயர்.

இந்த நிலங்களுக்கு வரியை நீக்கி இறையிலி நிலங்களாக கோவில்களுக்கு மன்னர்கள் வழங்கினார்கள். இது கோவில் நிதி வருவாய்க்கான ஏற்பாடாகியிருந்தது. இதன் மூலம் அன்றாட பூஜைகள் செய்தல், விளக்கு எரிதல், அமுது படைத்தல், மற்றும் கோவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த ஊரில் பல்லவர் காலத்தை சேர்ந்த புகழ்பெற்ற சிவன் கோவிலான வியாக்ரபுரீஸ்வரர் கோவில் உள்ளது எனவே இது இந்த கோவிலுக்கு கொடுத்த நிலத்தின் எல்லையை குறிக்கும் சூல கற்களாக இருக்க வாய்ப்பு உள்ளது. இந்த ஊர் மக்கள் இதை இன்றும் எல்லைல்கல் என்றே அழைக்கின்றனர். தமிழகத்தில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட சூலக்கற்களில் கழுதை மற்றும் புறா உருவம் இடம் பெற்றிருக்கவில்லை. ஆனால் இதில் இடம் பெற்றிருப்பது அரிதாகவே கருத வேண்டியுள்ளது. விஜய நகர மன்னர்கள் ஆட்சியின் கீழ் இருந்த புறா மற்றும் கழுதை குல சின்னங்களாக கொண்டவர்கள் இந்த கோவிலுக்கு நிலம் வழங்கியதாக இருக்கக்கூடும் என்று கருதுகிறோம். மேலும் இதுகுறித்து தொடர் ஆய்வில் உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story