அடுத்தடுத்து 3 வீடுகளில் புகுந்து 28 பவுன் நகை கொள்ளை


அடுத்தடுத்து 3 வீடுகளில் புகுந்து 28 பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 29 Jun 2021 8:57 PM IST (Updated: 29 Jun 2021 8:57 PM IST)
t-max-icont-min-icon

அடுத்தடுத்து 3 வீடுகளில் புகுந்து 28 பவுன் நகை கொள்ளை.

பூந்தமல்லி,

மாங்காடு அடுத்த மதனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (வயது 31), யூ-டியூப் சேனல் நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். இரவு வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 23 பவுன் நகை, ஒரு லேப்டாப், ஒரு கேமரா ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

அதேபோல் இவரது வீட்டிற்கு அருகில் வசிப்பவர் அப்துல் ஜாவித் (37), சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று முன் தினம் கேளம்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 5 பவுன் நகை திருடப்பட்டிருந்தது.

அதைத்தொடர்ந்து இவர்களது வீட்டிற்கு அருகில் வசித்த நாகராஜன் (50), என்ற தனியார் கல்லூரியில் பேராசிரியர் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றது தெரியவந்தது.

இந்த சம்பவங்கள் குறித்து தகவலறிந்த மாங்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொள்ளை சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். மாங்காட்டில் ஒரே நாளில் அடுத்தடுத்து 3 வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story