தமிழகத்தில் ஒரே நாளில் 4,512 பேருக்கு கொரோனா


தமிழகத்தில் ஒரே நாளில் 4,512 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 30 Jun 2021 5:37 PM IST (Updated: 30 Jun 2021 5:37 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் மட்டும் தொற்று அதிகம். தமிழகத்தில் ஒரே நாளில் 4,512 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 58 ஆயிரத்து 419 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 2,599 ஆண்கள், 1,913 பெண்கள் என மொத்தம் 4 ஆயிரத்து 512 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் 12 வயதுக்கு உட்பட்ட 159 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 719 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். இதில் அதிகபட்சமாக கோவையில் 563 பேரும், ஈரோட்டில் 493 பேரும், சேலத்தில் 302 பேரும், சென்னையில் 275 பேரும், திருப்பூரில் 281 பேரும், குறைந்தபட்சமாக ராமநாதபுரத்தில் 15 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

118 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இதுவரை 3 கோடியே 18 லட்சத்து 36 ஆயிரத்து 177 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 14 லட்சத்து 47 ஆயிரத்து 44 ஆண்களும், 10 லட்சத்து 28 ஆயிரத்து 108 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 38 பேரும் உள்பட 24 லட்சத்து 75 ஆயிரத்து 190 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதில் 12 வயதுக்கு உட்பட்ட 89 ஆயிரத்து 618 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 3 லட்சத்து 56 ஆயிரத்து 793 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு ஆஸ்பத்திரியில் 71 பேரும், தனியார் ஆஸ்பத்திரியில் 47 பேரும் என 118 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். அந்த வகையில் தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரை, கோவையில் தலா 12 பேரும், சேலத்தில் 9 பேரும், வேலூர், ராணிப்பேட்டை, சென்னையில் தலா 7 பேரும், செங்கல்பட்டில் 6 பேர் உள்பட நேற்று மட்டும் 29 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 24 பேர் இணை நோய் அல்லாதவர்கள் ஆவர். அந்த வகையில் தமிழகத்தில் இதுவரை 32 ஆயிரத்து 506 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

71,559 படுக்கைகள் காலி

தமிழகத்தில் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுபவர்களில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளில் 9 ஆயிரத்து 600 பேரும், ஆக்சிஜன் வசதி அல்லாத சாதாரண படுக்கைகளில் 4 ஆயிரத்து 638 பேரும், ஐ.சி.யு. படுக்கைகளில் 4 ஆயிரத்து 57 பேரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அந்தவகையில் நேற்று 38 ஆயிரத்து 908 ஆக்சிஜன் படுக்கைகள், 26 ஆயிரத்து 778 ஆக்சிஜன் வசதி அல்லாத சாதாரண படுக்கைகள், 5 ஆயிரத்து 873 ஐ.சி.யு. படுக்கைகள் என மொத்தம் 71 ஆயிரத்து 559 படுக்கைகள் ஆஸ்பத்திரிகளில் காலியாக உள்ளது. அதேபோல், கொரோனா பராமரிப்பு மையங்களில் 6 ஆயிரத்து 965 பேர் சிகிச்சையில் உள்ளனர். அந்த வகையில் 59 ஆயிரத்து 204 படுக்கைகள் காலியாக இருக்கின்றன.

6,013 பேர் ‘டிஸ்சார்ஜ்’

கொரோனா பாதிப்பில் இருந்து 6,013 பேர் நேற்று ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக கோவையில் 986 பேரும், ஈரோட்டில் 546 பேரும், திருப்பூரில் 396 பேரும், சேலத்தில் 508 பேரும் அடங்குவர். இதுவரையில் 24 லட்சத்து 3 ஆயிரத்து 349 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 39 ஆயிரத்து 335 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story