குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்க வேண்டும் மத்திய அரசுக்கு கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்


குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்க வேண்டும் மத்திய அரசுக்கு கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 1 July 2021 8:24 PM IST (Updated: 1 July 2021 8:24 PM IST)
t-max-icont-min-icon

மாநில அரசுகளுடன் இணைந்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்க வேண்டும் மத்திய அரசுக்கு கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்.

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசு கைவிட்டதால், தமிழகத்தில் 44 சதவீதம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயல்பாட்டை நிறுத்தியுள்ளன. 6 கோடியே 30 லட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களைக் கொண்ட இந்தியாவில் 50 லட்சம் நிறுவனங்கள் மட்டுமே நிதி தொகுப்பைப் பெற்றுள்ளதாக உலக வங்கி சுட்டிக்காட்டியிருக்கிறது. இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களைக் கைதூக்கிவிடப் பல திட்டங்களை மத்திய அரசு அறிவித்துக்கொண்டிருக்கிறது. இந்த திட்டங்களையும், கொள்கைகளையும் மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தி, மூழ்கி கொண்டிருக்கும் இந்த நிறுவனங்களையும், இவற்றை நம்பியிருக்கும் 10 கோடியே 20 லட்சம் பேரின் வாழ்வாதாரத்தையும் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு மீட்டெடுக்க வேண்டும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்கும் பணியை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே தொடங்கிவிட்டார். வழக்கம்போல் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழகத்தை அணுகாமல், தமிழகத்துக்கு மோடி அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story