மருந்தாளுநர் தேர்வில் பி.பார்ம் பட்டதாரிகளுக்கு பணி அளிக்கப்பட வேண்டும் அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்


மருந்தாளுநர் தேர்வில் பி.பார்ம் பட்டதாரிகளுக்கு பணி அளிக்கப்பட வேண்டும் அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 12 July 2021 12:47 PM GMT (Updated: 12 July 2021 12:47 PM GMT)

மருந்தாளுநர் தேர்வில் பி.பார்ம் பட்டதாரிகளுக்கு பணி அளிக்கப்பட வேண்டும் அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.

சென்னை,

பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் 1,235 மருந்தாளுநர்கள் உள்ளிட்ட 4,624 துணை மருத்துவப் பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதற்கான அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டு, அடுத்த சில நாட்களில் ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்படவுள்ளது. இம்முறையாவது பி.பார்ம் பட்டதாரிகளுக்கு மருந்தாளுநர் பணி அளிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவர்களிடம் எழுந்திருக்கிறது.

மருந்தாளுநர் பணிக்கு அடிப்படைத் தகுதி டி.பார்ம் என்றால், டி.பார்ம் மற்றும் அதைவிட கூடுதலாக படித்த அனைவருக்கும் மருந்தாளுநர் பணி வழங்கப்பட வேண்டும்.

1963-65 காலத்தில் டி.பார்ம் படிப்பு மட்டுமே இருந்ததால், மருந்தாளுநர் பணிக்கு அதுவே அடிப்படைத் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் பி.பார்ம் படிப்பு 1975-ம் ஆண்டில்தான் அறிமுகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து பி.பார்ம் படித்தவர்களும் மருந்தாளுநர் ஆகலாம் என்று விதிகள் மாற்றப்படாதது தான் அனைத்துச் சிக்கல்களுக்கும் காரணமாகும்.

மருந்தாளுநர் பணி நியமனத்தில் டி.பார்ம் பட்டயதாரிகள், பி.பார்ம் பட்டதாரிகள் ஆகிய இரு தரப்பினரின் நலன்களும் பாதுகாக்கப்பட வேண்டும். அதைக் கருத்தில் கொண்டு மருந்தாளுநர் பணிக்கு இரு தரப்பினரும் விண்ணப்பித்து, தகுதி அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும் வகையில், புதிய திட்டத்தை தயாரித்து அரசு செயல்படுத்த வேண்டும்; இரு தரப்பினரின் நலன்களையும் காக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story