திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடர்பாக ஆசிரியர்கள் வீடு, வீடாக விழிப்புணர்வு பிரசாரம்


திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடர்பாக ஆசிரியர்கள் வீடு, வீடாக விழிப்புணர்வு பிரசாரம்
x
தினத்தந்தி 13 July 2021 7:11 AM GMT (Updated: 13 July 2021 7:11 AM GMT)

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையத்தில் அரசினர் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த அரசு பள்ளியில் புதிய மாணவர்களின் சேர்க்கையை ஊக்கப்படுத்தும் வகையில் தலைமையாசிரியர் சீனிவாசலு தலைமையில் மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு குழு அமைக்கப்பட்டு உள்ளது.

பட்டதாரி ஆசிரியர் சிவகுமார் உள்பட 9 ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அடங்கிய இந்த குழுவினர் பாரதியார், நேரு, மகாத்மா காந்தி போன்ற மாறு வேடத்தில் ஈகுவார்பாளையம் ஊராட்சியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் ஆட்டோவில் வீடு வீடாக சென்று அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

மேலும், அரசு பள்ளியின் வசதிகள், அங்கு படிக்கும் மாணவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் போன்றவற்றையும் இந்த குழுவினர் பொதுமக்களிடையே வித்தியாசமான முறையில் விளக்கி கூறுகின்றனர்.
அதேபோல் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தேரடி தெருவில் பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. தமிழகம் முழுவதும் தற்போது அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், இந்த அரசு பள்ளியில் அப்பகுதி மாணவர்களை சேர்க்கக்கோரியும், அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதால் ஏற்படும் நன்மை குறித்தும் பள்ளி தலைமை ஆசிரியர் பி.ஆறுமுகம் தலைமையில் ஆசிரியர்கள் நேற்று வீடு வீடாக சென்று பெற்றோர்களை சந்தித்து பிரசாரம் செய்தனர். ஆசிரியர்களின் இந்த முயற்சியை பொதுமக்கள் பலரும் பெரிதும் 
பாராட்டினார்கள்.

Next Story