ஓய்வுபெற்ற அதிகாரி வீட்டில் 45 பவுன் நகை கொள்ளை கைவரிசை காட்டிய கொள்ளையர்களுக்கு வலைவீச்சு


ஓய்வுபெற்ற அதிகாரி வீட்டில் 45 பவுன் நகை கொள்ளை கைவரிசை காட்டிய கொள்ளையர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 21 July 2021 5:55 AM IST (Updated: 21 July 2021 5:55 AM IST)
t-max-icont-min-icon

நங்கநல்லூரில் ஓய்வுபெற்ற வீட்டு வசதி வாரிய அதிகாரி வீட்டில் 45 பவுன் நகை, 2 கிலோ வெள்ளி ஆகியவற்றை கொள்ளையர்கள் திருடிசென்றனர்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த நங்கநல்லூரில் உள்ள ஐயப்பா நகர் பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீதர் (வயது 61). இவர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் அதிகாரியாக பணியாற்றி ஒய்வு பெற்றவர் ஆவார். இவர் நேற்று முன்தினம் மாலை சென்னை அண்ணா நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் சென்றார்.

பின்னர் விழா முடிந்து இரவு 11 மணியளவில் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க இரும்பு கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே பதறியடுத்து கொண்டு வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, 2 அறைகளில் இருந்த 2 பீரோவில் வைத்திருந்த 45 பவுன் நகை, 2 கிலோ வெள்ளி, ரூ.70 ஆயிரம் மற்றும் ஒரு லேப்டாப் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

கொள்ளையர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து பழவந்தாங்கல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த அறையில் உள்ள பீரோக்கள் மற்றும் கதவுகளில் பதிவான கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

மேலும் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அதிகாரி வீட்டில் கைவரிசை காட்டிய கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story