சென்னை விமான நிலையத்தில் 8 கிலோ தங்கம் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் 8 கிலோ தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 27 July 2021 5:17 AM GMT (Updated: 27 July 2021 5:17 AM GMT)

சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.4 கோடியே 3 லட்சம் மதிப்புள்ள 8 கிலோ 170 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள், அந்த விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக சோதனை செய்தனா்.

அதில் சந்தேகத்தின்பேரில் 2 பயணிகளை நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் 2 பேரும் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் வீட்டு உபயோக பொருட்களான அரிசி குக்கர், ஜூசர், மிக்சி போன்ற பொருட்கள் இருந்தன.

8 கிலோ தங்கம் பறிமுதல்

அவற்றை சந்தேகத்தின்பேரில் பிரித்து பார்த்தபோது, அதன் மோட்டார்களில் தங்கத்தை வளையங்கள் மற்றும் தகடுகளாக மாற்றி மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனா். அவர்களிடம் இருந்து ரூ.4 கோடியே 3 லட்சம் மதிப்புள்ள 8 கிலோ 170 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், துபாய் விமான நிலையத்தில் ஒருவர், இந்த வீட்டு உபயோக பொருட்களை தங்களிடம் கொடுத்து சென்னை விமான நிலையத்துக்கு கொண்டு சென்றவுடன், ஒருவர் உங்களுக்கு விமான டிக்கெட்டுக்கான தொகையை கொடுத்துவிட்டு, இந்த பொருட்களை பெற்றுக்கொள்வார் என்று கூறியதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அவர்கள் 2 பேரிடம் இருந்து அந்த பொருட்களை வாங்க யாராவது வருகிறார்களா? என சுங்க இலாகா அதிகாரிகள் மாறுவேடத்தில் கண்காணித்தனர். ஆனால் அதுபோல் யாரும் பொருட்களை பெற்று செல்ல வரவில்லை. இதையடுத்து 2 பேரையும் சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story