கமிஷனர் அலுவலகத்தில் ரவுடி கல்வெட்டு ரவி, பரபரப்பு கோரிக்கை மனு ‘திருந்தி வாழ வாய்ப்பு தர வேண்டும்’


கமிஷனர் அலுவலகத்தில் ரவுடி கல்வெட்டு ரவி, பரபரப்பு கோரிக்கை மனு ‘திருந்தி வாழ வாய்ப்பு தர வேண்டும்’
x
தினத்தந்தி 29 July 2021 9:36 AM IST (Updated: 29 July 2021 9:36 AM IST)
t-max-icont-min-icon

பிரபல ரவுடி கல்வெட்டு ரவி, தனக்கு திருந்தி வாழ வாய்ப்பு தரவேண்டும் என்று கோரிக்கை வைத்து மனு ஒன்றை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

சென்னை,

வடசென்னையை கலக்கி வந்த பிரபல ரவுடி கல்வெட்டு ரவி, பா.ஜ.க.வில் இணைந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் நேற்று அவர் திடீரென்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு தலைமையக கூடுதல் கமிஷனர் லோகநாதனை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-

நான் சென்னை தண்டையார்பேட்டை, வ.உ.சி.நகரில் குடும்பத்துடன் வசி க்கிறேன். எனக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். மகள்களை நல்ல படியாக பள்ளியில் படிக்க வைத்துள்ளேன். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக நான் குற்றச்சம்பவங்களில் ஈடுபடும்படியாகி விட்டது. என் மீதுள்ள பெரும்பாலான வழக்குகள் பொய்யாக ஜோடித்து போடப்பட்டவை.

திருந்தி வாழ வாய்ப்பு

என் மீதான வழக்குகளை கோர்ட்டில் முறையாக சந்திப்பேன். நான் தற்போது ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறேன். குற்றங்களில் ஈடுபடாமல் நான் திருந்தி வாழ ஆசைப்படுகிறேன். அதற்கான உறுதி மொழியையும் கொடுக்கிறேன். எனது பெயரை தவறாக பயன்படுத்தி சிலர் குற்றச்செயலில் ஈடுபட்டால், அதுபற்றி தீர விசாரித்து போலீசார் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். திருந்தி வாழ எனக்கு வாய்ப்பு தரவேண்டும்.

இவ்வாறு கல்வெட்டு ரவி தனது கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளார். கல்வெட்டு ரவியின் இந்த கோரிக்கை மனு சென்னை போலீஸ் வட்டாரத்தில் நேற்று பரபரப்பாக பேசப்பட்டது.

Next Story