புஞ்சைபுளியம்பட்டியில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார்சைக்கிளை திருடிய 2 பேர் கைது- கண்காணிப்பு கேமரா மூலம் சிக்கினர்
புஞ்சைபுளியம்பட்டியில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார்சைக்கிளை திருடிய 2 வாலிபர்களை கண்காணிப்பு கேமரா பதிவை வைத்து போலீசார் கைது செய்தனர்.
புஞ்சைபுளியம்பட்டி,
புஞ்சைபுளியம்பட்டியில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார்சைக்கிளை திருடிய 2 வாலிபர்களை கண்காணிப்பு கேமரா பதிவை வைத்து போலீசார் கைது செய்தனர்.
மோட்டார்சைக்கிள் திருட்டு
புஞ்சைபுளியம்பட்டி தங்கசாலை வீதியை சேர்ந்தவர் வேணுகோபால் (வயது 25). இவர் புஞ்சைபுளியம்பட்டி பஸ் நிலையம் அருகே உள்ள செல்போன் கடையில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் வேலையை முடித்துவிட்டு தனது மோட்டார்சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு தூங்க சென்றுவிட்டார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது மோட்டார்சைக்கிளை காணவில்லை.
இதனால் அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை. யாரோ மர்மநபர் ேமாட்டார்சைக்கிளை திருடிச்சென்றது தெரியவந்தது. பின்னர் அவர் இதுபற்றி புஞ்சைபுளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கண்காணிப்பு கேமராவில் பதிவு
மேலும் சம்பவம் நடந்த இடத்தின் அருகே பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்தனர். அதில் சம்பவம் நடந்த நள்ளிரவில் 2 வாலிபர்கள், வேணுகோபால் வீடு அருகே வருவதும், பின்னர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த அவரது மோட்டார்சைக்கிளை திருடிக்கொண்டு ஓட்டிச்செல்லும் காட்சியும் பதிவாகி இருந்தது.
இதைத்தொடர்ந்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, மோட்டார்சைக்கிளை திருடிய மர்மநபர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
2 வாலிபர்கள் கைது
இந்தநிலையில் புஞ்சைபுளியம்பட்டி மேட்டுப்பாளையம் ரோடு ஜெ.ஜெ.நகர் பிரிவு அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுசாமி, சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் 2 பேர் வந்து கொண்டிருந்தனர்.
அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர்களது உருவம் கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்மநபர்கள் உருவம் போல் இருந்தது. இதனால் சந்தேகத்தின் பேரில் நடத்திய விசாரணையில் அவர்கள் புஞ்சைபுளியம்பட்டி சேரன் வீதியை சேர்ந்த சதீஷ் (22), பவானிசாகர் அம்மாபாளையத்தை சேர்ந்த சிவா (32) ஆகியோர் என்பதும், அவர்கள் 2 பேரும் வந்தது புஞ்சைபுளியம்பட்டி தங்கசாலை வீதியை சேர்ந்த வேணுகோபாலின் மோட்டார்சைக்கிள் என்பது தெரிய வந்தது.
சம்பவத்தன்று இரவு அவரது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார்சைக்கிளை திருடியதையும், தற்போது அதனை விற்பதற்காக மேட்டுப்பாளையம் கொண்டு சென்றதையும் ஒப்புக்கொண்டனர். இதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து அந்த மோட்டார்சைக்கிள் மீட்கப்பட்டது.
Related Tags :
Next Story