தமிழகத்தில் கொரோனா தொற்றை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் வருமா? மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை


தமிழகத்தில் கொரோனா தொற்றை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் வருமா? மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
x
தினத்தந்தி 6 Aug 2021 8:24 PM IST (Updated: 6 Aug 2021 8:24 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பதோடு, புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை,

தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் தொற்றின் எண்ணிக்கை சற்று அதிகரித்து காணப்படுகிறது. 9-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஆனால் புதிய தளர்வுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

ஆனால் சென்னையில் மக்கள் கூடும் சில பகுதிகளில் திடீர் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. அதன் மூலம் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

இன்று அறிவிப்பு?

ஊரடங்கு காலம் முடியும் நிலையில், அதை மேலும் நீட்டிப்பதற்கான ஆலோசனைக் கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நடத்துகிறார். அவர் தலைமையில் பிற்பகல் 12.30 மணியளவில் நடக்க இருக்கும் இந்தக் கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறதா? அதற்கு ஏற்ற வகையில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டுமா? என்பது பற்றி இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

அதைத் தொடர்ந்து ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் புதிய கட்டுப்பாடுகள் பற்றிய அறிவிப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அல்லது நாளை வெளியிடுவார் என்று தெரிகிறது.

Next Story