வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை: கணவர்-மாமியாருக்கு ஜெயில்; சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
சென்னை கிண்டி சதானிபேட்டையைச் சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 32). இவருக்கும், திருவண்ணாமலையைச் சேர்ந்த சுகன்யாவுக்கும் (21) கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
திருமணத்தின்போது 7 பவுன் நகையும், மோட்டார்சைக்கிளும் வரதட்சணையாக மாப்பிள்ளை வீட்டார் கேட்டுள்ளனர். தங்களால் இவ்வளவு வரதட்சணை கொடுக்க இயலாது என்று சுகன்யாவின் தந்தை, தாய்மாமா ஆகியோர் தெரிவித்துள்ளனர். அதற்கு மாப்பிள்ளை வீட்டார், தற்போது இருப்பதை வைத்து திருமணத்தை நடத்தலாம், நகை, மோட்டார்சைக்கிளை திருமணத்துக்கு பின்னர் கொடுங்கள் என்று கூறி உள்ளனர். அதன்படி செஞ்சியில் திருமணம் நடந்தது. திருமணமான 3 மாதத்தில் இருந்து வரதட்சணை கேட்டு சுகன்யாவை பார்த்திபன், அவரது தாயார் பத்மா (50) ஆகியோர் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இதனால் மனம் உடைந்த சுகன்யா 20.2.2012 அன்று தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பார்த்திபன், பத்மா ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு சென்னை மகளிர் கோர்ட்டில் நீதிபதி முகமது பாரூக் முன்னிலையில் நடந்துவந்தது. போலீசார் தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் எல்.ஸ்ரீலேகா ஆஜராகி வாதாடினார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, பார்த்திபன், பத்மா ஆகியோர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவர்கள் இருவருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
Related Tags :
Next Story