காஞ்சீபுரத்தில் பட்டப்பகலில் துணிகரம்: சார்பதிவாளர் அலுவலக ஊழியர் வீட்டில் 45 பவுன் நகை, பணம் கொள்ளை


காஞ்சீபுரத்தில் பட்டப்பகலில் துணிகரம்: சார்பதிவாளர் அலுவலக ஊழியர் வீட்டில் 45 பவுன் நகை, பணம் கொள்ளை
x
தினத்தந்தி 5 Sept 2021 11:22 AM IST (Updated: 5 Sept 2021 11:22 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரத்தில் சார்பதிவாளர் அலுவலக ஊழியர் வீட்டில் 45 பவுன் தங்க நகை மற்றும் பணம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் பெரியார் நகர், பெரிய தோட்டத்தில் வசித்து வருபவர் ராஜி. இவர் சென்னை மீனம்பாக்கம் ராணுவ அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கவிதா. இவர் வாலாஜாபாத் சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் வழக்கம்போல் ராஜி பணிக்கு சென்ற நிலையில், கவிதா காலையில் தன் உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். மீண்டும் கவிதா மாலை வீடு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனே பதறியடித்து கொண்டு உள்ளே சென்று பார்த்த போது, வீட்டில் இருந்த 4 பீரோக்களை திறந்து 45 பவுன் தங்க நகை, வைரத்தோடு, மற்றும் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

தனிப்படை அமைப்பு

இதுகுறித்து தகவல் கிடைத்ததும், காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர், நகர துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன், காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை பதிவு செய்தனர். மேலும், அப்பகுதியில் இருக்கக்கூடிய கண்காணிப்பு கேமரா முழுவதும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எம்.சுதாகர் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கொள்ளையர்களை பிடிக்க விரைந்துள்ளது. பட்டப்பகலில் சார்பதிவாளர் அலுவலக ஊழியர் வீட்டில் 45 பவுன் தங்க நகைகள், வைர தோடு, பணம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story