ஸ்ரீபெரும்புதூர் அருகே தொழிற்சாலை குடோனில் தீ விபத்து

ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் தொழிற்சாலை குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. 3-வது மாடியில் சிக்கியவரை மீட்கும்போது தவறி விழுந்து காயம் அடைந்தார்.
தொழிற்சாலை குடோனில் தீ
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மேவலுர்குப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கார் சீட் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் கார் சீட்கள் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கார் நிறுவனங்களுக்கும் வினியோகம் செய்யப்படுகிறது. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.இங்கு 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் தொழிற்சாலை குடோன் முதல் தளம், 2-வது தளம், 3-வது தளம் என அனைத்து பகுதியிலும் திடீரென மளமளவென தீப்பிடித்து எரிய தொடங்கியது.
தவறி விழுந்தவர் காயம்
இரவு பணியில் ஈடுபட்டிருந்த 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெளியே ஓடிவந்தனர். வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் தீப்பற்றி எரியும் குடோனில் சிக்கி ஊருக்கு போராடினர். தகவலறிந்து விரைந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் உடனடியாக இருங்காட்டுக்கோட்டை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடினர்.
மாடியில் சிக்கி தவித்த 2 வடமாநில தொழிலாளர்களை தீயணைப்பு துறையினர் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர் அதற்குள் தொழிலாளிகளில் ஒருவர் கயிறு மூலம் கீழே குதிக்க முயன்றார். அவர் கை தவறி 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்தார். அதிர்ஷ்டவசமாக லேசான காயகளுடன் உயிர் தப்பினார். அவரை தீயணைப்பு துறையினர் மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 3-வது மாடியில் இருந்த மற்றொரு தொழிலாளியை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
முதல்கட்ட விசாரணையில் தீ விபத்தால் குடோனில் இருந்த ரூ.1 கோடி மதிப்பிலான சீட் ரோல்கள் தீயில் கருகி சேதம் அடைந்து விட்டதாகவும், மின்கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story






