உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் மீதான தாக்குதல் குறித்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தல்
உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் மீதான தாக்குதல் குறித்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
பெங்களூரு:
மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
விவசாயிகளுக்கு பாடம்
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் மீது நடைபெற்ற தாக்குதல் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகள் மீது மத்திய அரசு மற்றும் உத்தரபிரதேசம் மற்றும் அரியானா மாநில அரசுகள் தாக்குதல் நடத்துகின்றன. மூன்று கருப்பு வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி விவசாயிகள் டெல்லியில் கடந்த 10 மாதங்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
உத்தரபிரதேசத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகளை மத்திய மந்திரி அஜய்மிஸ்ரா மகன் கார் ஏற்றி கொலை செய்துள்ளார். போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு தக்க பாடம் புகட்டப்படும் என்று அஜய் மிஸ்ரா முன்பு எச்சரித்து இருந்தார். இந்த நிலையில் இந்த சம்பவத்தை அஜய் மிஸ்ரா மகன் அரங்கேற்றியுள்ளார். விவசாயிகள் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கோரிக்கை விடுக்கிறார்கள். அதை ஏற்க வேண்டியது மத்திய அரசின் கடமை.
சட்டவிரோதம்
போராட்டம் நடத்தும் விவசாயிகளை பா.ஜனதா தொண்டர்கள் உருட்டு கட்டையால் தாக்க வேண்டும் என்று அரியானா மாநில முதல்-மந்திரி கூறியுள்ளார். தாக்குதலில் இறந்த விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூற காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி அங்கு சென்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.
பிரதமர் மோடி உத்தரபிரதேசத்திற்கு வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால் இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு அவர் ஆறுதல் கூட கூறவில்லை. இது தான் அவர் விவசாயிகள் மீது காட்டும் அக்கறை. சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி மதன் லோகு, காங்கிரஸ் தலைவர்களை கைது செய்தது சட்டவிரோதம் என்று கூறியுள்ளார்.
அரசியல் சாசனத்தின் மாண்புகள்
நாட்டில் சர்வாதிகார மனப்பான்மை எந்த அளவுக்கு உள்ளது என்பதற்கு இது சாட்சி. ஜனநாயகம், அரசியல் சாசனத்தின் மாண்புகளுக்கு உட்பட்டு மத்திய அரசு மற்றும் உத்தரபிரதேச அரசு நடந்து கொள்ளவில்லை. மத்திய அரசு மிரட்டல் தந்திரத்தை பின்பற்றுகிறது. இது நாட்டிற்கு நல்லதல்ல. விவசாயிகளுக்கு எதிராக கருத்து கூறிய அரியானா முதல்-மந்திரி மற்றும் மத்திய உள்துறை இணை மந்திரி ஆகியோர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும். ஆனால் எதிர்க்கட்சிகள், ஊடகங்கள் மற்றும் அரசுக்கு எதிராக கருத்து கூறுபவர்கள் மீது தான் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்படுகிறது.
உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். விவசாயிகள் மீது கார் ஏற்றிய வழக்கில் மத்திய மந்திரி மகனை இதுவரை கைது செய்யாதது ஏன்?. மத்திய மந்திரி அஜய்மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும். விவசாயிகள் கொல்லப்பட்டதை மூடிமறைக்க உத்தரபிரதேச அரசு ரூ.45 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளது. கொலையாளிகளை முதலில் கைது செய்ய வேண்டும். ஆர்.எஸ்.எஸ். எப்போதும் ஏழைகளுக்கு ஆதரவாக இருந்தது இல்லை. சமூகநீதியை அந்த அமைப்பு ஏற்பது இல்லை.
இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
Related Tags :
Next Story