தாம்பரத்தில் வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்த கலெக்டரின் காரை தி.மு.க.வினர் முற்றுகை


தாம்பரத்தில் வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்த கலெக்டரின் காரை தி.மு.க.வினர் முற்றுகை
x
தினத்தந்தி 13 Oct 2021 4:48 AM IST (Updated: 13 Oct 2021 4:48 AM IST)
t-max-icont-min-icon

தாம்பரத்தில் வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்த மாவட்ட கலெக்டரின் காரை தி.மு.க.வினர் முற்றுகையிட்டனர். வாக்கு எண்ணிக்கை மையம் அருகே அ.தி.மு.க. வினர் திரண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தாம்பரம்,

சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரத்தில் உள்ள தனியார் பள்ளியில், பரங்கிமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட 15 ஊராட்சிகளில் பதிவான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை மையத்தின் அருகே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வேட்பாளரின் முகவர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தனியார் பள்ளி அருகே அமைந்துள்ள அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சின்னையா வீட்டின் முன்பு மாவட்ட செயலாளர்கள் சிட்லபாக்கம் ராஜேந்திரன், கே.பி.கந்தன், முன்னாள் அமைச்சர் சின்னையா, பா.ஜ.க. மாவட்ட பார்வையாளர் செம்பாக்கம் வேதசுப்பிரமணியம், அ.தி.மு.க. நிர்வாகிகள் பெரும்பாக்கம் ராஜசேகர், கோவிலம்பாக்கம் மணிமாறன் உட்பட 500-க்கும் மேற்பட்ட கூட்டணி கட்சியினர் திரண்டிருந்தனர்.

கலெக்டர் கார் முற்றுகை

இதையறிந்த தி.மு.க.வினரும் வாக்கு எண்ணும் மையத்தின் அருகில் செல்ல தொடங்கினர். அவர்களை போலீசார் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்த முயன்றனர். அதற்கு தி.மு.க.வினர், “எங்களையும் வாக்கு எண்ணும் மையத்தின் அருகில் அனுமதியுங்கள். இல்லை என்றால் அ.தி.மு.க.வினர் அனைவரையும் வெளியேற்ற வேண்டும்” எனக்கூறி போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு செய்ய வந்த செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத்தின் காரை தி.மு.க.வினர் வழிமறித்து முற்றுகையிட்டனர். அ.தி.மு.க.வினரை மட்டும் போலீசார் உள்ளே அனுமதித்து உள்ளதாக அவரிடம் தி.மு.க.வினர் புகார் தெரிவித்தனர்.

வெளியேற்றினர்

இதையடுத்து போலீசார், தி.மு.க.வினர் அனைவரையும் அப்புறப்படுத்தி மாவட்ட கலெக்டரின் காரை வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அனுப்பி வைத்தனர்.

பின்னர் சின்னையா வீட்டு முன்பு திரண்டிருந்த அ.தி.மு.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி முக்கிய நிர்வாகிகள் தவிர மற்ற அனைவரையும் போலீசார் வெளியேற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story