பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது
பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது
பொள்ளாச்சி
திருமூர்த்தி அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டதால் பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. தரைப்பாலங்கள் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பாலாற்றில் வெள்ளம்
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதன் காரணமாக பி.ஏ.பி. திட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம் அணைகள் நிரம்பி விட்டன. மேலும் அணைகளுக்கு வரும் இருந்து நீர்வரத்தை பொறுத்து பாதுகாப்பு கருதி அவ்வப்போது உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் மாடேத்திபள்ளம், ஆலாங்கண்டி பள்ளங்களில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால் பாலாற்றின் இருகரைகளையும் தொட்டப்படி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
ஆஞ்சநேயர் கோவிலை சூழ்ந்தது
இதற்கிடையில் திருமூர்த்தி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து அணையில் இருந்து வினாடிக்கு 150 கன அடி உபரிநீர் பாலாற்றில் திறந்து விடப்பட்டது. மழைநீருடன், உபரிநீரும் சேர்ந்ததால் பாலாற்றில் காட்டாற்று வெள்ளம் இருகரைகளையும் தொட்டபடி பாய்ந்து சென்றது.
பொள்ளாச்சி அருகே சோமந்துறைசித்தூரில் உள்ள பாலாற்றங் கரை ஆஞ்சநேயர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து பாதுகாப்பு கருதி கோவில் நடைசாத்தப்பட்டது. பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதை தொடர்ந்து பக்தர்கள் ஆற்றின் கரையோரத்தில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
தரைப்பாலங்கள் மூழ்கின
மேலும் பக்தர்கள் அத்துமீறி செல்வதை தடுக்க போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ஆற்றில் வெள்ளம் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையில் கெங்கம்பாளையம், சோமந்துறைசித்தூர், கரியாஞ்செட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பல கி.மீ. தூரம் சுற்றி வர வேண்டிய நிலை ஏற்பட்டதால் கிராம மக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
Related Tags :
Next Story