கொலைக்கு பழிக்குப்பழி வாங்க நடுரோட்டில் 3 பேரை ஓடஓட விரட்டி அரிவாளால் வெட்டு
வாலிபர் கொலைக்கு பழிக்குப்பழி வாங்க நடுரோட்டில் 3 பேரை ஓடஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டிய தந்தை மற்றும் அவருடைய மகன்கள் 2 பேர் என 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாலிபர் கொலை
சென்னை கொரட்டூர், கங்கை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அரவிந்தன் (வயது 24). இவர், 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் முன்விரோதம் காரணமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக திருமுல்லைவாயல் மேட்டு தெருவைச் சேர்ந்த ஆகாஷ் (25), கொரட்டூர் காமராஜர் நகரைச் சேர்ந்த பிரசாந்த் (27), அவருடைய தம்பி மணி (25) உள்பட 8 பேரை கொரட்டூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கொலை வழக்கு பூந்தமல்லி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த ஆகாஷ், பிரசாந்த், மணி ஆகிய 3 பேரும் வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் கோர்ட்டில் ஆஜராகி விட்டு பாடிக்கு வந்தனர்.
ஓடஓட விரட்டி வெட்டினர்
இதையறிந்த அரவிந்தனின் தந்தை ரவி (65), சகோதரர்கள் அப்பன்ராஜ் (32), விவேக் (30) ஆகியோர் அரவிந்தன் கொலைக்கு பழிக்குப்பழி வாங்க ஆகாஷ் உள்ளிட்ட 3 பேரையும் கையில் அரிவாளுடன் சுற்றி வளைத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர்.
ஆனாலும் ரவி, அப்பன்ராஜ், விவேக் ஆகிய 3 பேரும் ஆகாஷ், பிரசாந்த், மணி ஆகிய 3 பேரையும் நடுரோட்டில் ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
3 பேர் கைது
இதுபற்றி தகவல் அறிந்து வந்த கொரட்டூர் போலீசார், படுகாயம் அடைந்த ஆகாஷ், பிரசாந்த், மணி ஆகியோரை சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு 3 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் கொரட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவி, அவருடைய மகன்கள் அப்பன்ராஜ், விவேக் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மகனின் கொலைக்கு பழிக்குப்பழியாக ஆகாஷ் உள்ளிட்ட 3 பேரையும் தனது மகன்களுடன் சேர்ந்து ரவி வெட்டியது தெரியவந்தது.
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 3 பேரையும் கத்தியுடன் அப்பன்ராஜ், விவேக் இருவரும் ஓடஓட விரட்டி வெட்டும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
Related Tags :
Next Story