செங்கல்பட்டு மாவட்டத்தில் பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் பற்றி தகவல் கொடுத்தால் வெகுமதி: கலெக்டர்
செங்கல்பட்டு மாவட்டத்தில் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் பற்றி தகவல் கொடுத்தால் வெகுமதி அளிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
பிளாஸ்டிக் உபயோகிக்க தடை
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தமிழக அரசு 2018-ம் ஆண்டு தடை செய்து அரசாணை வெளியிட்டது.
இதன்படி ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் கோப்பைகள், கைப்பைகள், தட்டுகள், உறிஞ்சு குழல்கள் கொடிகள் போன்றவை தயாரிக்கப்படுவதும், உபயோகிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளன.
விழிப்புணர்வு பிரசாரம்
சென்னை ஜகோர்ட்டு மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் பிளாஸ்டிக் தடையை கடுமையாக அமல்படுத்தவும், மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு தொடர்ந்து உத்தரவுகளை வழங்கி வருகின்றன.
இதுகுறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை செய்து வருகின்றன. மாவட்டம் தோறும் விழிப்புணர்வு பேரணிகள், சமூக அறிவிப்பு பதாகைகள் நிறுவுதல் போன்றவை மூலம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
அடையாளம் காண முடியவில்லை
மேலும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், ஆய்வுகள் மற்றும் புகார்களின் அடிப்படையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை கண்டறிந்து வருகிறது.
இருப்பினும் சிறிய இடத்தில் சட்டவிரோதமாக செயல்படும் உற்பத்தியாளர்களை அடையாளம் காண்பது கடினமாக உள்ளது. இந்த உற்பத்தியாளர்களில் பெரும்பாலானவர்கள், எந்த அரசு துறைகளிடமும் முறையான பதிவு மற்றும் அனுமதி இல்லாமல் தற்காலிகமாக செயல்பட்டு வருகின்றன.
புகார் தெரிவிக்கலாம்
சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்ட பொதுமக்கள். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்கள் குறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு தெரிவிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். புகார்களை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் இணையதளத்தில் (https://tnpcb.gov.in/contact.php) தெரிவிக்கலாம்.
சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்ட பொதுமக்களுக்கு, அவர்களின் பங்களிப்பிற்காக பாராட்டும் வெகுமதியும் அளிக்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story