ஸ்ரீபெரும்புதூர் அருகே டிரைவர் அடித்து கொலை
ஸ்ரீபெரும்புதூர் அருகே பக்கத்து வீட்டு சண்டையை தடுக்க முயற்சித்த டிரைவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.
மது அருந்தியதில் தகராறு
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சேலையனுர் கிராமம் படவேட்டு அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 38). இவர் கார் டிரைவராக வேலை செய்தார். அதே பகுதியை சேர்ந்தவர்கள் தட்சிணாமூர்த்தி (33) மற்றும் சந்திரசேகர் (27). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் சேர்ந்து மதுஅருந்தி உள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்தநிலையில் தட்சிணாமூர்த்தி அவரது உறவினர் பிரபாகரன் மற்றும் தம்பி சிவகுமார் ஆகியோர் சந்திரசேகர் வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த சுரேஷ் ஏன் சண்டை போடுகிறர்கள்? என்று அவர்களை தடுத்துள்ளார்.
டிரைவர் பலி
இதில் ஆத்திரம் அடைந்த தட்சிணாமூர்த்தி, பிரபாகரன் மற்றும் சிவகுமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து சண்டையை தட்டிக்கேட்ட சுரேசை பயங்கரமாக அடித்து உதைத்தாக தெரிகிறது. இதில் தலையில் பலத்த காயமடைந்த சுரேஷ் ரத்தம் காயத்துடன் மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சுரேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக தட்சணாமூர்த்தி, பிரபாகரன், சிவகுமார் ஆகிய 3 பேரையும் கைது செய்து ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காஞ்சிபுரம் கிளை சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story