பாலியல் தொல்லை காரணமாக பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


பாலியல் தொல்லை காரணமாக பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 19 Dec 2021 12:38 PM GMT (Updated: 2021-12-19T18:08:01+05:30)

மாங்காடு அருகே பாலியல் தொல்லை காரணமாக பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் உருக்கமாக எழுதிய 3 கடிதங்கள் போலீசாரிடம் சிக்கின.

பிளஸ்-1 மாணவி தற்கொலை

சென்னையை அடுத்த மாங்காடு பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி, பூந்தமல்லியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று மதியம் தாயுடன் வீட்டில் இருந்த மாணவி, திடீரென தனது அறைக்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த மாங்காடு போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது வீட்டில் போலீசார் சோதனை செய்தனர்.

பாலியல் தொல்லை

அதில் மாணவி எழுதிய உருக்கமான 3 கடிதங்கள் போலீசாரிடம் சிக்கின. அதில் 2 கடிதங்களில் அவர், “ஆசிரியர்கள், உறவினர்கள் யாரையும் நம்பக்கூடாது. இந்த உலகத்தில் பாதுகாப்பானது, கல்லறையும், தாயின் கருவறையும்தான். பள்ளியில் கூட பாதுகாப்பு இல்லை” என உருக்கமாக எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மற்றொரு கடிதத்தை மாணவி எழுதி விட்டு, பின்னர் அதை கிழித்து போட்டு உள்ளார். அதில், முன்னாள் ஆசிரியை ஒருவரின் மகன் பாலியல் தொல்லை கொடுத்ததால் தான் தற்கொலை செய்து கொள்வதாகவும், தனது சாவுக்கு அவரே காரணம் எனவும் அவரது பெயரை குறிப்பிடாமல் எழுதி இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

தூக்கில் போடவேண்டும்

இதுபற்றி மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி குறிப்பிட்ட ஆசிரியையின் மகன் யார்? என விசாரித்து வருகின்றனர்.

இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் கூறும்போது, “எங்கள் மகள், இதற்கு முன்பு தனியார் பள்ளியில் படித்து வந்தாள். அந்த தனியார் பள்ளி ஆசிரியையின் மகன்தான் என் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவரை கைது செய்து தூக்கில் போடவேண்டும்” என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.


Next Story