காஞ்சீபுரத்தில் சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம்
காஞ்சீபுரத்தில் திருவாதிரை நட்சத்திரத்தையொட்டி சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.
கோவில் நகரம் என்ற பெருமைக்குரிய காஞ்சீபுரத்தில் ஏராளமான சிவன் கோவில்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான கோவில்களில் திருவாதிரை நட்சத்திரத்தையொட்டி ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு அபிஷேகமும், விசேஷ தீபாராதனைகளும் நடந்தன. விஷ்ணு பகவான் ஆமை வடிவத்தில் சிவபெருமானை பூஜித்த பெருமைக்குரிய காஞ்சீபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் உள்ள நடராஜப் பெருமானுக்கும், சிவகாமி அம்மனுக்கும் 32 வகையான சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடந்தது. தீபாராதனைகள் நடைபெற்றன. நடராஜரும், சிவகாமியும் பட்டு ரோஜா மாலை அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். காஞ்சீபுரம் ஏகாம்பரநாத சாமி கோவிலிலும் சாமிக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.
காஞ்சீபுரம் முத்தீஸ்வரர், வழக்கறுத்தீஸ்வரர், மணிகண்டீஸ்வரர் உள்பட பல்வேறு கோவில்களில் திருவாதிரையை முன்னிட்டு மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகமும், விசேஷ தீபாராதனைகளும் நடந்தன.
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம், இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர், உமையாட்சீஸ்வரர் கோவிலிலும் ஆருத்ரா தரிசன விழா நடந்தது.
Related Tags :
Next Story