பனி மூட்டம் காரணமாக விபத்து; கார்-வேன் மோதல்; 3 பேர் சாவு
உத்திரமேரூர் அருகே பனி மூட்டம் காரணமாக கார்-வேன் மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
‘வாட்டர் சர்வீசஸ்’
அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி அருகே உள்ள சிறுகளத்தூர் மேலத்தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி(வயது 30). ‘வாட்டர் சர்வீசஸ்’ வைப்பதற்காக திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் பகுதியில் உறவினர் மூலம் இடத்தை தேர்வு செய்தார்.மேலும் இதற்கான பொருட்களை சென்னையில் வாங்கலாம் என்ற எண்ணத்தில் சுந்தரமூர்த்தி பணத்தை எடுத்துக்கொண்டு காஞ்சீபுரம் ஓரிக்கை பகுதியில் உள்ள தன்னுடைய உறவினர் வீட்டில் தங்கிவிட்டு பின்னர் திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கத்தில் உள்ள உறவினரை சந்திப்பதற்காக முடிவு செய்தார்.
கார்- வேன் மோதல்
அதன்படி சுந்தரமூர்த்தி, சிறுகளத்தூர் பகுதியை சேர்ந்த தனது நண்பர் சரவணன் (27) மற்றும் செல்வம் (29) ஆகியோருடன் அரியலூர் பகுதியில் இருந்து ஓரிக்கைக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.காரை சரவணன் ஓட்டிச்சென்றார். காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த பெருநகர் அருகே சென்றபோது, அதிகாலையில் பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் எதிரில் வந்த வேன் மீது இவர்களது கார் நேருக்கு நேராக மோதியது.
3 பேர் சாவு
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சுந்தரமூர்த்தி, சரவணன், செல்வம் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். விபத்துக்குள்ளான வேனில் மேல்மருவத்தூர் கோவிலுக்கு செல்வதற்காக வந்த 13 பெண்கள், 3 ஆண்களில் ஒரு சிலருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அனுப்பப்பட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த பெருநகர் போலீசார், பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story