சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கொரோனா பரிசோதனை, தடுப்பூசி, பாதுகாப்பு மைய விவரங்களுக்கு இணையதளம் அறிமுகம்
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கொரோனா பரிசோதனை, தடுப்பூசி மற்றும் பாதுகாப்பு மையங்களின் விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
மாதிரி சேகரிப்பு மையங்கள்
இது தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சளி, காயச்சல், இருமல், உடல்வலி மற்றும் தொண்டை வலி போன்ற கொரோனா அறிகுறிகளுடன் வரும் நபர்களுக்கும், தொற்று பாதித்த நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் பொதுமக்களுக்கு கட்டணமில்லாமல் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 160 தடவல் மாதிரி சேகரிப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இங்கு சேகரிக்கப்படும் தடவல் மாதிரிகள் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மையங்களுக்கு அனுப்பப்பட்டு முடிவுகள் மாநகராட்சி சுகாதாரத்துறையின் சார்பாக பொதுமக்களுக்கு 24 மணி நேரத்துக்குள் தெரியப்படுத்தப்படுகிறது.
முதற்கட்ட உடற்பரிசோதனை
அதேபோல், கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக 21 முதற்கட்ட உடற்பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.இந்த மையங்களில் தொற்று பாதித்த நபர்களுக்கு ரத்த பரிசோதனை, எக்ஸ்-ரே போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தொற்றின் தன்மைக்கு ஏற்ப வீட்டில் தனிமைப்படுத்திகொள்ளவோ அல்லது கொரோனா பாதுகாப்பு மையங்கள் அல்லது ஆஸ்பத்திரிகளுக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ளவோ அறிவுறுத்தப்படும்.
கொரோனா பாதுகாப்பு மையங்கள்
தொற்று பாதித்த ஒருவருக்கு வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளும் வசதி இல்லாத நிலையில், கொரோனா பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவர். தற்போது, மாநகராட்சியின் சார்பில் 4 மையங்கள் தயார் நிலையில் உள்ளது.இந்த மையங்களில் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி சிகிச்சை அளிக்கப்படும். இந்த மையங்களில் தொற்று பாதித்த நபர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் மாநகராட்சியின் சார்பில் வழங்கப்படும்.
மாநகராட்சியின் சார்பில் வார இறுதி நாட்களில் 1,600 இடங்களில் கொரோனா மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்களும், இதர நாட்களில் மாநகராட்சியின் அனைத்து நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சமுதாய நல மையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இணையதளம்
எனவே, தொற்று அறிகுறியுள்ள நபர்கள், தொற்று பாதித்த நபர்களுடன் தொடர்பில் இருந்த நபர்கள் பரிசோதனை மேற்கொள்ளவும், தொற்று பாதித்த நபர்கள் முதற்கட்ட உடற்பரிசோதனை மேற்கொள்ளவும், தனிமைப்படுத்திக் கொள்ளும் வசதியில்லாத நபர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள மாநகராட்சியின் கொரோனா பாதுகாப்பு மையங்களை தெரிந்து கொள்ளவும்
மற்றும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டிய நபர்கள் தடுப்பூசி மையங்களின் விவரங்களை அறிந்து கொள்ளவும் பெருநகர சென்னை மாநகராட்சியின் http://covid19.chennaicorporation.gov.in/covid/home என்ற இணையதள இணைப்பில் சென்று அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story