பூந்தமல்லி அருகே மெட்ரோ ரெயில் கட்டிட தொழிலாளர்கள் 26 பேருக்கு கொரோனா


பூந்தமல்லி அருகே மெட்ரோ ரெயில் கட்டிட தொழிலாளர்கள் 26 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 13 Jan 2022 6:16 AM GMT (Updated: 13 Jan 2022 6:16 AM GMT)

பூந்தமல்லி அருகே மெட்ரோ ரெயில் கட்டிட பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் 26 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. ஆவடி மாநகராட்சி ஊழியர்கள் 9 பேரும் பாதிக்கப்பட்டனர்.

தொழிலாளர்களுக்கு கொரோனா

கொரோனா 3-ம் அலையின் தாக்கம் தீவிரமாக உள்ள நிலையில், தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது. இந்த நிலையில் போரூரில் இருந்து பூந்தமல்லி வரை இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் பணி நடைபெற்று வருகிறது.

இதில் குமணன் சாவடியில் இருந்து பூந்தமல்லி வரை சாலையின் நடுவே தடுப்புகள் அமைத்து கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஏராளமான ஊழியர்கள் பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் தங்கி கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் நசரத்பேட்டை அறையில் தங்கியிருந்த 126 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 26 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தற்போது அங்கு மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட பணிகள் நடைபெறுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆவடி மாநகராட்சி

அதே போல், ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் பொதுமக்கள் முககவசம் அணியாமல் வருவதாலும், சமூக இடைவெளி இல்லாமல் கூட்டம் கூடுவதாலும் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 1-ந் தேதி முதல் இதுவரை ஆவடி மாநகராட்சியில் 19 ஆயிரத்து 812 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 419 பேர் இறந்துள்ளனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் 176 பேருக்கு பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அதிகரித்து வரும் கொரோனா பெருந் தொற்று காரணமாக ஆவடி மாநகராட்சியில் பணியாற்றக்கூடிய டாக்டர், பொறியாளர், உதவி பொறியாளர், சுகாதார பிரிவு ஆய்வாளர்கள், அலுவலக உதவியாளர், நகரமைப்பு அலுவலக பிரிவின் அலுவலர் உள்ளிட்ட 9 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வணிக வளாகங்கள், காய்கறி மார்க்கெட் மற்றும் பஸ் நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story