தி.மு.க. எம்.எல்.ஏ.விடம் ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டல்


தி.மு.க. எம்.எல்.ஏ.விடம் ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டல்
x
தினத்தந்தி 28 Jan 2022 12:46 PM GMT (Updated: 28 Jan 2022 12:46 PM GMT)

தி.மு.க. எம்.எல்.ஏ.விடம் ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டிய தம்பதி கைது செய்யப்பட்டனர்.

ரூ.25 லட்சம் தரவேண்டும்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் எஸ்.சந்திரன். இவரை செல்போனில் தொடர்பு கொண்ட மர்மநபர், “நான் தலைமைசெயலகத்தில் இருந்து உள்துறை டி.எஸ்.பி. பேசுகிறேன். உங்கள் தொகுதி சம்பந்தமாக ஒரு புகார் வந்துள்ளது. அதை சரிசெய்ய ரூ.25 லட்சம் செலவாகும்” என்றார்.

மேலும் அவர், “இதே போன்ற பிரச்சினை விளாத்திகுளம் எம்.எல்.ஏ.வுக்கும் ஏற்பட்டது. அதை நான் சரி செய்து கொடுத்தேன். அவர் ரூ.25 லட்சம் கொடுத்தார். அதேபோல் நீங்களும் இந்த பிரச்சினையை சரி செய்துகொள்ளுங்கள். பணத்தை நான் சொல்லும் இடத்துக்கு கொண்டுவந்து தரவேண்டும்” என்று கூறி இணைப்பை துண்டித்தார்.

போலீசில் புகார்

இதையடுத்து எம்.எல்.ஏ. சந்திரன், விளாத்திகுளம் எம்.எல்.ஏ.வை தொடர்பு கொண்டு கேட்டபோது, தன்னிடமும் ஒரு நபர் பணம் கேட்டார். ஆனால் எனது தொகுதி பிரச்சினையை நானே பார்த்துக்கொள்கிறேன் என்று அழைப்பை துண்டித்ததாக தெரிவித்தார்.

பின்னர் எம்.எல்.ஏ. சந்திரன், மீண்டும் அந்த நபரை தொடர்பு கொண்டபோது, தான் திருத்தணியில் தனியார் ஓட்டல் அருகே கருப்பு நிற காரில் வருகிறேன். அங்கு வந்து பணத்தை தரும்படி கூறினார்.

இது குறித்து எம்.எல்.ஏ. சந்திரன் அளித்த புகாரின்பேரில் திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர் சொன்ன ஓட்டல் அருகே மறைந்திருந்தனர்.

தம்பதி கைது

அப்போது அங்கு கருப்பு நிற காரில் வந்து இறங்கிய சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த விஜயகுமார்(வயது 43), அவருடைய மனைவி யசோதா (43) ஆகியோரிடம் எம்.எல்.ஏ.வின் உதவியாளர் சதீஷ், ரூபாய் நோட்டுகளை வைத்து கொடுத்தார்.

அதை யசோதா, வாங்க முயன்றபோது அங்கு மறைந்து இருந்த போலீசார் கணவன், மனைவி இருவரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போலியான அடையாள அட்டை, ஒட்டுனர் உரிமம், 2 செல்போன்கள், கார் மற்றும் ரூ.10 ஆயிரத்தையும் கைப்பற்றினர். கைதான இருவரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story