நீட் தேர்வில் இருந்து கண்டிப்பாக தமிழகத்துக்கு விலக்கு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து கண்டிப்பாக விலக்கு பெற்று தரப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்து உள்ளார்.
முதலாமாண்டு மாணவர்கள்
திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு மருத்துவ மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பால்வளத் துறை அமைச்சர் நாசர் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். அப்போது அவர்கள் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்று பாட புத்தகங்களை வழங்கினார்கள்.
நீட் தேர்வில் விலக்கு
அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
தமிழகத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள 11 மருத்துவ கல்லூரிகளை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் மோடி அவர்கள் திறந்து வைத்தார். அப்படி திறக்கப்பட்ட கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. தமிழகத்திற்கு ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு பெற்றுத்தர மீண்டும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கண்டிப்பாக ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற்றே தீருவோம்.
இடஒதுக்கீடு
தமிழக முதல்-அமைச்சர் மருத்துவக் கல்லூரியில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி அளித்தார். அந்த வகையில் மருத்துவப் படிப்புகளுக்கு 544 பேர் தேர்வாகி உள்ளார்கள். இந்த ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. அவர்களுக்கான கல்வி கட்டணத்தை தமிழக அரசே ஏற்கும்.
தமிழகத்தில் இன்னும் பெரம்பலூர், மயிலாடுதுறை, தென்காசி, ராணிப்பேட்டை, காஞ்சீபுரம், திருப்பத்தூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு புதிய மருத்துவக் கல்லூரிகள் தேவைப்படுகிறது. தமிழக முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின்படி இந்த மாத இறுதிக்குள் டெல்லிக்கு சென்று ஒன்றிய அரசுடன் இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்துவோம்.
மாணவர்களை மீட்கநடவடிக்கை
தமிழகத்தை சேர்ந்த 2 ஆயிரம் மாணவர்கள் மற்றும் 3 ஆயிரம் புலம்பெயர்ந்த தமிழர்கள் உக்ரைனில் சிக்கி தவிக்கின்றனர் என்ற தகவலை அறிந்த உடன் அவர்கள் சொந்த ஊருக்கு திரும்புவதற்கான செலவை தமிழக அரசு ஏற்கும் என்று முதல்-அமைச்சர் அறிவித்தார். இதற்காக 24 மணி நேரமும் விவரங்களை சேகரிக்கும் தகவல் மையம் அமைக்கப்பட்டு உள்ளது. வெகு விரையில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் பத்திரமாக வீடு திரும்புவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சிறப்பு அலுவலர் செந்தில்குமார், எம்.எல்.ஏ.க்கள் வி.ஜி.ராஜேந்திரன், கிருஷ்ணசாமி, சுதர்சனம், கோவிந்தராஜன், துரை சந்திரசேகர், மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமாமகேஸ்வரி, திருவள்ளூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி முதல்வர் அரசி ஸ்ரீவட்சவ், தி.மு.க.வின் திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர் பூபதி, டாக்டர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story