செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் நகராட்சி கவுன்சிலர்கள் பதவியேற்பு

செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் நகராட்சி கவுன்சிலர்கள் நேற்று பதவியேற்று கொண்டனர்.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு நகராட்சியில் மொத்தம் உள்ள 33 வார்டுகளில் வெற்றி பெற்ற 22 தி.மு.க. கவுன்சிலர்கள், 6 அ.தி.மு.க. கவுன்சிலர்கள், 4 சுயேச்சை கவுன்சிலர்கள், ஒரு விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் ஆகியோர் நேற்று கவுன்சிலர்களாக முறைப்படி அனைவருக்கும் நகராட்சி ஆணையர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
நந்திவரம்- கூடுவாஞ்சேரி நகராட்சி
செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த மாதம் 19-ந்தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் புதிதாக தரம் உயர்த்தப்பட்ட நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில் 9-வது வார்டில் தி.மு.க.வை சேர்ந்த கார்த்திக் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மீதியுள்ள 29 வார்டுகளுக்கு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் உள்பட 30 பேரும் பதவியேற்கும் விழா நகராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று காலை நடைபெற்றது.
பதவியேற்று கொண்ட 20 தி.மு.க. கவுன்சிலர்கள், 8 அ.தி.மு.க. கவுன்சிலர்கள், 2 சுயேச்சை கவுன்சிலர்கள் அனைவருக்கும் முறைப்படி நகராட்சி ஆணையர் இளம்பரிதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
மறைமலைநகர்
இதேபோல மறைமலைநகர் நகராட்சியில் தேர்தலில் வெற்றிபெற்ற தி.மு.க.வை சேர்ந்த 11 தி.மு.க.கவுன்சிலர்கள், 5 அ.தி.மு.க. கவுன்சிலர்கள், 2 தே.மு.தி.க. கவுன்சிலர்கள், ஒரு ஐ.ஜே.கே. கவுன்சிலர், 2 சுயேச்சை கவுன்சிலர்கள் உள்பட 21 கவுன்சிலர்கள் முறைப்படி பதவி ஏற்றுக்கொண்டனர். அனைவருக்கும் நகராட்சி ஆணையர் லட்சுமி பதவி பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் கவுன்சிலர்கள் அனைவருக்கும் சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகளை தெரிவித்தார். முன்னதாக வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் பதவி ஏற்பதற்காக நகராட்சி அலுவலகத்திற்கு நுழைந்தபோது நகராட்சி ஊழியர்கள் ரோஜா இதழ்களை தூவி கவுன்சிலர்களை அன்போடு வரவேற்றனர்.
பதவியேற்பு விழாவை முன்னிட்டு மறைமலைநகர் நகராட்சி அலுவலகத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. நந்திவரம்-கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் ஆகிய நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களின் உறவினர்கள் நண்பர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுராந்தகம்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. அதில் தி.மு.க. சார்பில் 19 பேரும், அ.தி.மு.க. சார்பில் 2 பேரும், சுயேச்சைகள் 3 பேரும் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு நேற்று மதுராந்தகம் நகராட்சி அலுவலகத்தில் மதுராந்தகம் நகராட்சி ஆணையாளர் அருள் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
மாங்காடு, குன்றத்தூர்
காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு நகராட்சியில் தி.மு.க. சார்பில் 14 பேரும், ம.தி.மு.க. சார்பில் 2 பேரும், அ.தி.மு.க. சார்பில் 6 பேர், சுயேச்சைகள் 5 பேர் என 27 பேர் வெற்றி பெற்றனர். தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் நேற்று மாங்காடு நகராட்சி அலுவலக வளாகத்தில் கவுன்சிலர்களாக பதவி ஏற்று கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு தேர்தல் நடத்தும் அதிகாரி சுமா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதேபோல் குன்றத்தூர் நகராட்சியில் தி.மு.க. சார்பில் 22 பேர், காங்கிரஸ் சார்பில் 2 பேர், அ.தி.மு.க. சார்பில் 5 பேர், சுயேச்சை ஒருவர் என 30 பேர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்கள் நேற்று குன்றத்தூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் கவுன்சிலர்களாக பதவி ஏற்று கொண்டனர். இவர்களுக்கு தேர்தல் நடத்தும் அதிகாரி தாமோதரன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
Related Tags :
Next Story






