செங்கல்பட்டு பாலாற்று மேம்பால பணியால் போக்குவரத்து நெரிசல்: போலீஸ் டி.ஐ.ஜி. ஆய்வு
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலம் பணியால் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் செல்ல அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சம்பவ இடத்திற்கு போலீஸ் டி. ஐ.ஜி சத்யபிரியா, போலீஸ் சூப்பிரண்டு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலம் வழியாக நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. தென்மாவட்டங்களுக்கு செல்லும் இந்த பிரதான சாலை கடந்த ஆண்டு பெய்த கனமழையின் காரணமாக பாலாற்று மேம்பாலத்தில் உள்ள சாலைகள் கடுமையாக சேதமடைந்தன. பின்னர் அதனை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டு கடந்த ஒரு மாதமாக பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே திருச்சி மார்க்கமாக உள்ள பழைய பாலம் மட்டும் தற்போது சீரமைக்கப்பட்ட நிலையில் சென்னை மார்க்கத்தில் உள்ள பாலத்தின் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் வாகனங்கள் கிராமப்புற சாலைகள் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. தென்மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வாகனங்கள் வருவதால் மாற்றுப்பாதையான மெய்யூர் மற்றும் பழவேலி, புக்கத்துறை, காவூர் உள்ளிட்ட சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் அதிகப்படியான வாகனங்களின் வருகையால் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் சூழ்நிலை ஏற்படுகிறது.
இதனையடுத்து போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் செல்ல அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சம்பவ இடத்திற்கு போலீஸ் டி. ஐ.ஜி சத்யபிரியா, செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆதர்ஸ் பச்சாரோ, தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அலெக்சாண்டர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
Related Tags :
Next Story