பக்கிங்காம் கால்வாயில் குடியிருப்புகளின் கழிவுநீரை வெளியேற்றிய லாரியின் உரிமம் ரத்து
பக்கிங்காம் கால்வாயில் குடியிருப்புகளின் கழிவுநீரை வெளியேற்றிய லாரியின் அனுமதியை போக்குவரத்து அலுவலர் ரத்து செய்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், லாரிகள் மூலம் சேகரிக்கப்பட்டு முட்டுக்காடு பகுதியில் உள்ள நீர்நிலையில் கொட்டப்படுவதாக புகார்கள் பெறப்பட்டது. இப்புகார் குறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய மறைமலைநகரில் உள்ள மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மற்றும் உதவி சுற்றுச்சூழல் பொறியாளர், சென்னை தலைமையில் இரு குழுக்கள் அமைக்கப்பட்டு நாவலூர் கிராமம் முதல் முட்டுக்காடு வரை பக்கிங்காம் கால்வாய் வழியே முட்டுக்காடு நீர்நிலையை சென்றடையும் பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வின் போது கானாத்தூர், ரெட்டிகுப்பம் பகுதியில் லாரி ஒன்றில் முட்டுக்காடு பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து எடுக்கப்படும் கழிவுநீர் பக்கிங்காம் கால்வாயில் வெளியேற்றுவது கண்டறியப்பட்டது. அந்த லாரியின் அனுமதி சீட்டின் மீது நடவடிக்கை மேற்கொண்டு ரத்து செய்ய சென்னை வட்டார போக்குவரத்து அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து செங்கல்பட்டு பரனூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சம்பந்தப்பட்ட லாரியின் அனுமதியை ரத்து செய்துள்ளார்.
Related Tags :
Next Story