வண்டலூர் அருகே குடியிருப்புக்குள் புகுந்த முதலை; பிடித்து சென்ற வனத்துறை
வண்டலூர் அருகே குடியிருப்புக்குள் புகுந்த முதலையை வனத்துறை அதிகாரிகள் பிடித்து சென்றனர்.
குடியிருப்புக்கு வந்த முதலை
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே நெடுங்குன்றம் ஊராட்சியில் உள்ள கொளப்பாக்கம் ஏரி அருகே உள்ள வரப்பிரசாத் நகரில் குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் இரவு 2 மணி அளவில் ஒரு முதலை தெருவில் ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. முதலை ஊர்ந்து செல்வதை பார்த்த தெரு நாய்கள் தொடர்ந்து குரைத்து கொண்டிருந்தன.
இதையடுத்து அந்த பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் வெளியே வந்து பார்த்தபோது 5 அடி நீளம் கொண்ட முதலையை சுற்றி நாய்கள் தொடர்ந்து குரைத்தபடி இருந்தன. முதலையை பார்த்த குடியிருப்புவாசிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அந்த பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர்.
அதன் பின்னர் வனத்துறையினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த வனத்துறையினர் குடியிருப்பு பகுதியில் ஊர்ந்து சென்ற 5 அடி நீளமுள்ள முதலையை பிடித்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
முதலைகளை பிடிக்க வேண்டும்
இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில்:-
நெடுங்குன்றம் ஊராட்சியில் உள்ள சதானந்தபுரம் ஏரியை ஒட்டியுள்ள எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக முதலைகள் அடிக்கடி ஏரியில் இருந்து குடியிருப்பு பகுதியை நோக்கி வரும். இது குறித்து பொதுமக்கள் தகவல் தரும் போது வனத்துறையினர் வந்து முதலையை பிடித்து செல்வார்கள். ஆனால் முதல் முறையாக கொளப்பாக்கம் ஏரியை ஒட்டியுள்ள வரப்பிரசாத் நகர் குடியிருப்பு பகுதியில் 5 அடி நீளமுள்ள முதலை புகுந்துள்ளது.
வண்டலூர் உயிரியல் பூங்காவை ஒட்டி அமைந்துள்ள கொளப்பாக்கம், நெடுங்குன்றம், ஏரிக்கு முதலைகள் எப்படி வருகிறது என்றால் அருகில் உள்ள வண்டலூர் பூங்காவில் பிறக்கும் முதலைக்குட்டிகளை பறவைகள் இரைக்காக தூக்கிவருகிறது. அப்போது இந்த ஏரியில் முதலை குட்டிகள் தவறி விழுந்துவிடுகிறது. அப்படி தவறி விழும் முதலைகுட்டிகள் இந்த ஏரியில் இருக்கும் மீன்களை சாப்பிட்டு வாழ்கிறது.
இந்த ஏரியில் உள்ள முதலைகளை பிடிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வனத்துறை அதிகாரிகள், வண்டலூர் உயிரியல் பூங்கா அதிகாரிகள் ஆகியோரிடம் பலமுறை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை சதானந்தபுரம் ஏரியில் சுற்றிதிரியும் முதலைகளை பிடிப்பதற்கு அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே வனத்துறை அதிகாரிகள் உடனடியாக கொளப்பாக்கம் ஏரி, நெடுங்குன்றம் சதானந்தபுரம் எம்.ஜி.ஆர். நகர் பகுதிகளில் உள்ள ஏரியில் இருக்கும் முதலைகளை முழுமையாக பிடிக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story