தாம்பரம் அரசு ஆஸ்பத்திரிகளில் கட்டிட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா
தாம்பரம் அரசு ஆஸ்பத்திரிகளில் கட்டிட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
செங்கல்பட்டு மாவட்ட அரசு ஆஸ்பத்திரி விரிவுரையாளர் கூட்டரங்கில் நேற்று மருத்துவத்துறை சார்பில், அரசு ஆஸ்பத்திரிகளில் பல்வேறு கட்டிட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் திறப்பு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது, தாம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் மைய கட்டிடம் ரூ.6.89 கோடியிலும், தாம்பரம் சானிடோரியத்திலுள்ள அரசு காச நோய் ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள நவீன புறநோயாளிகள் பிரிவு கட்டிடத்தின் 2-ம் தளத்தில் இடைநிலை மேற்பரிசோதனை ஆய்வக கட்டிடம் ரூ.2.60 கோடியிலும், அதே ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் மற்றும் இதர நோய் தொற்றுக்கான தனிமைப்படுத்தப்பட்ட பிரிவு கட்டிடம் ரூ.22 கோடியிலும் நடைபெற உள்ள கட்டிட பணிகளை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, அரவிந்த ரமேஷ், எஸ்.எஸ்.பாலாஜி, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் கோ.காமராஜ், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை கமிஷனர் எஸ்.கணேஷ், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஆ.ராகுல் நாத், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story