கல்பாக்கம் அணுமின் நிலையம் அமைக்க நிலம் ஒதுக்கியதற்கு கைமாறாக இலவச மின்சாரம் வழங்க வேண்டும்- கிராம சபை
கல்பாக்கம் அணுமின் நிலையம் அமைக்க நிலம் ஒதுக்கியதற்கு கைமாறாக சதுரங்கப்பட்டினம் அரசு ஆஸ்பத்திரி, குடிநீர் வினியோகத்திற்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று சிறப்பு கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிறப்பு கிராமசபை கூட்டம்
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் ஊராட்சியின் சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி சாமிநாதன் தலைமையில் நடந்தது. திருக்கழுக்குன்றம் ஒன்றிய குழு துணைத்தலைவர் எஸ்.ஏ.பச்சையப்பன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் சதுரங்கப்பட்டினம் ஊராட்சியில் உள்ள பொதுமக்கள், வியாபாரிகள், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பங்கேற்றனர். அவர்கள் முன்னிலையில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கல்பாக்கம் அணுமின் நிலையம் அமைப்பதற்கு 3-ல் ஒரு பங்கு நிலங்களை சதுரங்கப்பட்டினம் ஊராட்சியில் உள்ள கிராம மக்கள் எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் வழங்கியுள்ளனர். அந்த நிலங்கள் மூலம் அணுமின் நிலையத்தில் உள்ள முக்கிய பகுதிகள் அனைத்தும் சதுரங்கப்பட்டினம் ஊராட்சி எல்லையில்தான் அமைந்துள்ளன. அதனால் அணுமின் நிலையம் கையகப்படுத்திய 3-ல் ஒரு பங்கு நிலத்திற்கு சதுரங்கப்பட்டினம் ஊராட்சிக்கு தொழில் வரி மட்டுமே தற்போது வரை அந்த நிர்வாகம் செலுத்தி வருகிறது. அணுமின் நிலைய நிர்வாகம் எந்தவித அடிப்படை வசதியும் இதுவரை செய்து கொடுக்காததால் இந்த ஊராட்சி எந்தவித வளர்ச்சியும் அடையவில்லை.
இலவச மின்சாரம்
எனவே நிலம் ஒதுக்கியதற்கு கைமாறாக அணுமின் நிலைய வேலை வாய்ப்புகளில் 40 சதவீத பணிகளை தகுதியின் அடிப்படையில் இந்த ஊராட்சி இளைஞர்களுக்கு வழங்க வேண்டும். சதுரங்கப்பட்டினத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு குடிநீர் வினியோகத்திற்கும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரத்தில் இருந்து உயர்அழுத்த மின்கம்பி அமைத்து இலவச மின்சாரம் வழங்க வேண்டும்.
கல்பாக்கம் அணுமின் நிலையம் சார்பில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளில் 40 சதவீத உதவிகளை நிலம் வழங்கிய இந்த ஊராட்சி மக்களுக்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அணுமின் நிலைய இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Related Tags :
Next Story