கூடுவாஞ்சேரி அருகே முதியவர் கொலை வழக்கில் மகன் உள்பட 5 பேர் கைது


கூடுவாஞ்சேரி அருகே முதியவர் கொலை வழக்கில் மகன் உள்பட 5 பேர் கைது
x
தினத்தந்தி 25 March 2022 6:50 PM IST (Updated: 25 March 2022 6:50 PM IST)
t-max-icont-min-icon

கூடுவாஞ்சேரி அருகே முதியவர் கொலை வழக்கில் மகன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

கொலை

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடு கூட்ரோடு பகுதியை சேர்ந்தவர் உமாபதி (வயது 65), இவர் கன்னிவாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் கம்பெனியில் எலெக்ட்ரிசியனாக பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை மோட்டார் சைக்கிளில் காயரம்பேட்டில் இருந்து நிறுவனத்துக்கு செல்லும் போது கன்னிவாக்கம் சுடுகாடு அருகே அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக வீச்சரிவாளால் கை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றது. இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சொத்துக்காக தனது தந்தையை, மகன் நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து திட்டம் தீட்டி வெட்டிக்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் கொலையாளிகளை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

கைது

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஊரப்பாக்கம் அருகே பதுங்கி இருப்பதாக வந்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் விரைந்து சென்று இறந்துபோன முதியவர் உமாபதி மகன் சரவணன் (வயது 38), அவரது நண்பர்களான வேளச்சேரியை சேர்ந்த உதயகுமார் (38), விக்னேஷ் ( 32), செல்வம் (38), சேகர் (40), ஆகியோரை மடக்கிப்பிடித்து கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

நீதிபதி அவர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். மேலும் இந்த கொலை வழக்கில் சரவணனின் மனைவி உள்பட மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story