செங்கல்பட்டில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
12 அம்ச கோரிக்கை
தொழிலாளர் சட்ட தொகுப்புகளை கைவிடுதல், மின்சார திருத்த சட்டத்தைத் திரும்ப பெறுதல், தேசிய பணமாக்கும் கொள்கை மூலம் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குதலை கைவிடுதல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு தி.மு.க., அதன் தொழிற்சங்கமான தொ.மு.ச. உள்பட பெரும்பாலான தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. போக்குவரத்து வேலை நிறுத்தத்தின் காரணமாக செங்கல்பட்டு பணிமனையில் இருந்து காஞ்சீபுரம், திருவள்ளுர், வேலூர், தாம்பரம், மதுராந்தகம், உத்திரமேரூர் உள்ளிட்ட இடங்களுக்கு 112 பஸ்கள் வழக்கமாக இயக்கப்படும்.
சாலை மறியல்
ஆனால், வேலைநிறுத்தம் காரணமாக குறைந்த அளவிலான பஸ்கள் இயக்கப்பட்டன. வேலை நிறுத்தத்தையொட்டி செங்கல்பட்டு தலைமை தபால் நிலையம் அருகே அண்ணா தொழிற்சங்கம், கம்யூனிஸ்டு் தொழிற்சங்கங்கள், தனியார் கம்பெனி தொழிற்சங்க ஊழியர்கள் உள்பட 1000-க்கும் மேற்பட்ட போக்குவரத்து ஊழியர்கள் பங்கேற்று மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கண்டித்து கோஷமிட்டபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனை தொடர்ந்து செங்கல்பட்டு புதிய பஸ் நிலையத்தில் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்ப்பட்டது.
இதன் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
காஞ்சீபுரம்
அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தி.மு.க. மற்றும் கூட்டனி கட்சியினர் காஞ்சீபுரம் காந்தி சாலை தேரடியில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்பாட்டத்தை காஞ்சீபுரம் தொகுதி எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி எழிலரசன் பங்கேற்று தொடங்கி வைத்தார். ஆர்பாட்டத்தில் மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும், பெட்ரோல் டீசல் எரிபொருள் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் உத்தரவின் பேரில் காஞ்சீபுரம் பஸ் பணிமனை, பஸ் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
காஞ்சீபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை அரசு பஸ்கள் குறைந்த அளவில் இயக்கப்பட்டது.
இதனால் சரியான நேரத்திற்கு வேலைக்கு செல்ல முடியாமல் பலரும் அவதிக்குள்ளானார்கள்.
காஞ்சீபுரம் காந்தி சாலை தேரடியில் சாலைமறியலில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
உத்திரமேரூர்
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் நேற்று சி.ஐ.டி.யு. சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாநில குழு உறுப்பினர் மதுசூதனன் தலைமை தாங்கினார். முன்னதாக அம்பேத்கர் சிலை அருகே இருந்த சி.ஐ.டி.யு. உறுப்பினர்கள் பஜார் வீதி வழியாக ஊர்வலமாக வந்தனர்.
பஸ் நிலையம் அருகே வந்தபோது மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது மின்சார தடை சட்டத்தை திரும்ப பெறு, பெட்ரோல், டீசல், கியாஸ் மீதான கலால் வரியை குறைத்து விலை உயர்வை கட்டுப்படுத்து. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்து என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
Related Tags :
Next Story






