ஜி.எஸ்.டி. அதிகாரிகளாக நடித்து தொழில் அதிபரிடம் மோசடியில் ஈடுபட்ட 2 பேர் கைது


ஜி.எஸ்.டி. அதிகாரிகளாக நடித்து தொழில் அதிபரிடம் மோசடியில் ஈடுபட்ட 2 பேர் கைது
x
தினத்தந்தி 7 April 2022 5:05 PM IST (Updated: 7 April 2022 5:05 PM IST)
t-max-icont-min-icon

ஜி.எஸ்.டி. துறை அதிகாரி போல நடித்து தொழில் அதிபரிடம் ரூ.1 கோடி மோசடியில் ஈடுபட்ட 2 பேர் சென்னையில் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

ஜி.எஸ்.டி. பிரச்சினை

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனத்தை வெங்கடேசன் என்பவர் நடத்தி வருகிறார். இவர் ஜி.எஸ்.டி. முறையாக செலுத்தவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது.

ரூ.4.75 கோடி ஜி.எஸ்.டி. தொகை செலுத்த ஜி.எஸ்.டி. துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினார்கள். இந்த பிரச்சினையை தீர்க்க வழி தெரியாமல் தொழில் அதிபர் வெங்கடேசன் தவித்த நிலையில் இருந்துள்ளார்.

வெங்கடேசனிடம், தணிகைவேலு என்பவரை அறிமுகம் செய்து வைத்து, அவர் ஜி.எஸ்.டி. தொகை பிரச்சினையை தீர்த்து வைப்பார் என்று ஆடிட்டர் ஒருவர் தெரிவித்து உள்ளார். தணிகைவேலுவும், தனக்கு ஜி.எஸ்.டி. துறை அதிகாரிகளை தெரியும், பிரச்சினையை தீர்த்து வைப்பதாக வெங்கடேசனிடம் கூறியுள்ளார். வெங்கடேசனும் அதை உண்மை என்று நம்பி இருக்கிறார்.

போலி ஜி.எஸ்.டி. அதிகாரி

தணிகைவேலு, தீபக்கோத்தாரி என்பவரை ஜி.எஸ்.டி. துறை அதிகாரி என்று வெங்கடேசனிடம் அறிமுகப்படுத்தி உள்ளார். தீபக்கோத்தாரியும், ஜி.எஸ்.டி. பிரச்சினையை தீர்த்துவைப்பதாக தெரிவித்துள்ளார். பிரச்சினையை தீர்ப்பதற்கு ரூ.1 கோடி கேட்டுள்ளார். வெங்கடேசனிடம், தீபக்கோத்தாரியும், தணிகைவேலுவும் இணைந்து ரூ.1 கோடி வாங்கி உள்ளனர்.

பிரச்சினை தீர்ந்துவிடும், என்று நிம்மதியாக இருந்த வெங்கடேசனுக்கு மீண்டும் அதிர்ச்சி செய்தி வந்தது. ஜி.எஸ்.டி. துறையில் இருந்து, ரூ.4.75 கோடி செலுத்த வேண்டும், என்று மீண்டும் நோட்டீஸ் வந்தது.

இதுபற்றி கேட்பதற்காக தணிகைவேலுவுக்கும், தீபக்கோத்தாரிக்கும் வெங்கடேசன் செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் அவர்கள் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டனர். ஜி.எஸ்.டி. அலுவலகத்திற்கு சென்று அதிகாரி தீபக்கோத்தாரியை பார்க்க வேண்டும், என்று வெங்கடேசன் கேட்டுள்ளார். ஆனால் அவரை போன்ற அதிகாரி யாரும் இங்கு இல்லை என்று அங்கு பணியில் இருந்தவர்கள் பதில் அளித்தனர். அப்போது தான் ஜி.எஸ்.டி. அதிகாரியாக நடித்து, தீபக்கோத்தாரி தன்னிடம் ரூ.1 கோடி பணம் பறித்துள்ளார், என்று வெங்கடேசனுக்கு தெரிய வந்தது.

அதிரடி கைது

பணத்தை இழந்த தொழில் அதிபர் வெங்கடேசன், இதுகுறித்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டார்.

மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் தேன்மொழி, துணை கமிஷனர் மீனா, கூடுதல் துணை கமிஷனர் அசோகன் ஆகியோர் மேற்பார்வையில், உதவி கமிஷனர் ஜான்விக்டர், இன்ஸ்பெக்டர் மேனகா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

கீழ்ப்பாக்கம் பர்னபி சாலையில் வசிக்கும் போலி ஜி.எஸ்.டி. அதிகாரி தீபக்கோத்தாரி (வயது 48) மற்றும் நங்கநல்லூரைச் சேர்ந்த தணிகைவேலு (47) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

தணிகைவேலு அகில பாரத சத்ரிய மகா சபா என்ற அமைப்பில் பொருளாளராக இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த மோசடியில், ஜி.எஸ்.டி. துறையைச் சேர்ந்த யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்று தொடர்ந்து விசாரணை நடப்பதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story