தமிழக அரசு ஆஸ்பத்திரிகளின் தீவிர சிகிச்சை பிரிவில் கூடுதல் படுக்கைகளை 14-ந்தேதி தொடங்கி வைக்கிறார் மு.க.ஸ்டாலின்


தமிழக அரசு ஆஸ்பத்திரிகளின் தீவிர சிகிச்சை பிரிவில் கூடுதல் படுக்கைகளை 14-ந்தேதி தொடங்கி வைக்கிறார் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 8 April 2022 5:21 PM IST (Updated: 8 April 2022 5:21 PM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசு ஆஸ்பத்திரிகளில் அமைக்கப்பட்டுள்ள 1,583 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளை வருகிற 14-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

உணர்ச்சி ஒருங்கிணைப்பு பூங்கா

சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் உள்ள குழந்தைகள் சமூக நல மையத்தில் நேற்று உணர்ச்சி ஒருங்கிணைப்பு பூங்கா அமைக்கும் பணியினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.

மேலும் பல்வேறு நலத்திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர். அப்போது நிருபர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.30 லட்சம் செலவில் உணர்ச்சி ஒருங்கிணைப்பு பூங்கா அமைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு, கவனக்குறைவு மிகை செயல்பாடு கோளாறு, பெருமூளைவாதம் மற்றும் உணர்ச்சி ஒருங்கிணைப்பு குறைபாடுகளை களைவதற்காக இந்த உணர்ச்சி ஒருங்கிணைப்பு பூங்கா உருவாக்கப்பட உள்ளது. மேலும், ரூ.25 லட்சம் செலவில் அதிவேகமாக இயங்கக்கூடிய லிப்ட் வசதியும் மேம்படுத்தப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.

கூடுதல் படுக்கைகள்

தமிழகம் முழுவதும் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் ரூ.364 கோடியே 22 லட்சம் மதிப்பீட்டில் தீவிர சிகிச்சை பிரிவில் கூடுதல் படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் தற்போது வரை 1,583 படுக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

அதன்படி ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் 12 புதிய படுக்கைகள் தீவிர சிகிச்சை பிரிவில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த 1,583 புதிய படுக்கைகளையும், வருகிற 14-ந்தேதி அண்ணாநகரில் திறக்கப்பட இருக்கிற தமிழ்நாடு அரசு சித்த மருத்துவ பல்கலைக்கழக விழாவில் முதல்-அமைச்சர் தொடங்கி வைப்பார்.

உலக சுகாதார தினம் ‘‘நமது பூமி, நமது சுகாதாரம்’’ என்ற கருப்பொருளுடன் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், தமிழகத்தில் உள்ள 2 ஆயிரத்து 200 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தலா 200 மரக்கன்றுகளை நடவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

‘‘எக்ஸ்-இ’’ தொற்று

மும்பையில் நேற்றைக்கு (நேற்று முன்தினம்) ஒருவருக்கு ‘‘எக்ஸ்-இ’’ என்ற புதிய தொற்று வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதாக கூறினார்கள். ஆனால் இன்று (நேற்று) அவருக்கு தொற்று பாதிப்பு இல்லை என மத்திய அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

விமான நிலையத்தில் தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தொடர்ந்து 15 நாட்களாக 50-க்கும் கீழ் தொற்று பதிவாகி வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரத்தில் மட்டும் தொற்றின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

தொற்று பாதிப்பில் சிறிய அளவில் ஏற்றங்கள் இருக்கிறது. எனவே, யாருக்காவது தொற்று உறுதி செய்யப்பட்டால், அவரது தொடர்புகளை கண்டறிய அலுவலர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறோம்.

தமிழகத்தில் சிறிய அளவில் தான் தொற்று உயர்ந்துள்ளது என அலட்சியமாக இருக்க வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு, ஆஸ்பத்திரி டீன் டாக்டர் பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story