காஞ்சீபுரம் கோவில்களில் தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம்
காஞ்சீபுரம் கோவில்களில் தமிழிசை சவுந்தரராஜன் காமாட்சியம்மனை மனமுருகி சாமி தரிசனம் செய்தார்.
புதுவை மற்றும் தெலுங்கானா மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் காஞ்சீபுரத்தில் உள்ள காமாட்சியம்மன் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில்களில் சாமி தரிசனம் செய்ய காஞ்சீபுரம் வருகை புரிந்தார். காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தந்த கவர்னரை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் காமாட்சியம்மனை மனமுருகி சாமி தரிசனம் செய்தார். அவருக்கு அர்ச்சகர்கள், பொன்னாடை அணிவித்து கோவில் பிரசாதங்களை வழங்கினர். கோவிலில் கோடைகால வசந்த நவராத்திரி நிறைவு விழா நடைபெறுவதையொட்டி சிறப்பு அபிஷேகத்தில் கலந்து கொண்டார்.
அதன்பின்னர் அத்திவரதர் புகழ்புற்ற காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சென்று அங்கு மலை மீதுள்ள பெருமாள் மற்றும் பெருந்தேவி தாயாரை சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்:-
ராமநவமி மட்டுமல்ல வசந்த நவராத்திரி நிறைவு நாள் என்பதால் காஞ்சீபுரத்தில் உள்ள காமாட்சி அம்மனை தரிசிக்க வேண்டும் என்று தரிசனம் செய்தேன் அனைவருக்கும் ராமநவமி நல்வாழ்த்துகள் தெரிவித்து கொள்கிறேன்.
அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். உடல் நலத்துடன் இருக்க வேண்டும். யாரெல்லாம் இன்னும் கொரோனா தடுப்பூசி போடவில்லையோ அவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்பது எனது கோரிக்கையாக இருக்கிறது. கொரோனா குறைந்திருந்தாலும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் மக்கள் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story