விவசாயிக்கு சரமாரி வெட்டு; உறவினர் 2 பேர் கைது
காஞ்சீபுரம் அருகே நில விற்பனையில் ஏற்பட்ட தகராறில், விவசாயின் கையை வெட்டி துண்டாக்கிய உறவினர் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
முன்விரோதம்
காஞ்சீபுரம் மாவட்டம் பள்ளபரந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விநாயகம் (வயது 50). விவசாயியான இவர், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்த அவரது உறவினர் திருமலை (55) மற்றும் அவரது மகன் அரசு (30). அதே கிராமத்தில் அரசு ஒருவருடைய நிலத்தை வாங்கும் நிலையில், அந்த நிலத்தை விநாயகம் வேறொருவருக்கு விற்று தந்துள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
2 பேர் கைது
இந்த நிலையில், பள்ளபரந்தூர் கிராமத்தில் ஒருவரது இறுதி சடங்கில் பங்கேற்ற விநாயகத்தை, அரசு மற்றும் திருமலை சரமாரியாக கத்தியால் வெட்டியுள்ளனர். இதில் விநாயகத்தின் இடது கை துண்டாகி, வலது கை மற்றும் கழுத்தில் பலத்த வெட்டு காயங்கள் ஏற்பட்டது. அதை பார்த்த அக்கம்பக்கத்தினர் விநாயகத்தை மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, உடனடியாக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுபற்றி காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால், சப்-இன்ஸ்பெக்டர் கங்காதரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து திருமலை, அரசு ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story