காஞ்சீபுரத்தில் மின்னல் தாக்கி பள்ளி மாணவன் பலி
காஞ்சீபுரத்தில் கனமழை பெய்த நிலையில், மின்னல் தாக்கி 7-ம் வகுப்பு மாணவன் பலியானான்.
பள்ளி மாணவன்
காஞ்சீபுரம் மாவட்டம் காஞ்சீபுரம் தாலுகா வாலாஜாபாத் ஒன்றியம் வையாவூர் ஊராட்சி அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் மோகன்குமார். இவரது மனைவி அஞ்சலை. கணவன், மனைவி இருவரும் கூலித்தொழிலாளிகள் ஆவர்.
இவர்களது மூத்தமகன் பவித்ரன் (வயது 14), 9-ம் வகுப்பும், இளையமகன் நந்தகுமார் (12) 7-ம் வகுப்பும், வையாவூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பயின்றனர். இந்நிலையில் சகோதரர்கள் இருவரும் நேற்று பள்ளி முடிந்து வீடு திரும்பி உள்ளனர். தாய், தந்தை இருவரும் கூலி வேலைக்கு சென்று இருந்த நிலையில், மழை வருவதை அறிந்த சகோதரர்கள் இருவரும் வீட்டின் அருகே உள்ள ஏரிக்கரையில் மேய்ச்சலுக்காக கட்டி வைத்திருந்த தங்களது பசுமாடுகளை ஓட்டி வர சென்றுள்ளனர்.
மின்னல் தாக்கியது
இந்நிலையில் காஞ்சீபுரம் சுற்று வட்டார பகுதிகளில் எதிர்பாராத விதமாக இடி, மின்னலுடன் கனமழை பெய்த நிலையில், கால்நடையை ஓட்டி வர சென்ற பவித்ரன், நந்தகுமார் ஆகியோர் மீது மின்னல் தாக்கியதில் சகோதரர்கள் இருவரும் மயங்கி விழுந்துள்ளனர். இதையடுத்து பசுமாடுகளை ஓட்டி வர சென்ற பவித்ரனும், நந்தகுமாரும் நீண்ட நேரமாக வராததால் உறவினர்கள் அவர்களை தேடி சென்றனர். அப்போது ஏரிக்கரையில் இருவரும் மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் இருவரையும் எழுப்பினர்.
பலி
அப்போது பவித்ரன் மட்டும் மயக்கம் தெளிந்து எழுந்தநிலையில், நந்தகுமார் மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து அறிந்து வந்த காஞ்சீபுரம் தாலுகா போலீசார் பள்ளி மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story