தேனம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பதால் குடிநீரில் கலப்படம்: நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு
காஞ்சீபுரம் மாநகராட்சிக்குட்பட்ட தேனம்பாக்கம் பகுதியை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காஞ்சீபுரம் 51-வது வார்டு கவுன்சிலர் சங்கர் தலைமையில், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் டாக்டர் ஆர்த்தியிடம் கோரிக்கை மனு வழங்கினர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
தாங்கள் வசித்து வரும் தேனம்பாக்கம் ஊரில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட பொதுப்பணித்துறை சார்ந்த ஏரியுள்ளது. இந்த ஏரியில் கோடைக்காலங்களில் 100 சதவீத சுகாதாரமற்ற கழிவுநீர் வந்து கொண்டிருக்கிறது. கழிவுநீர் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த ஏரியைச்சுற்றி சுமார் 50 ஆழ்துளை கிணறு மூலம் காஞ்சீபுரம் மாநகராட்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த கழிவுநீர் கலப்பதால் குடிநீர் மாசுடன் சுகாதாரமற்ற நிலையில் வருவதால் வயிற்றுபோக்கு, வாந்தி மற்றும் இதனை அருந்தும் ஆடு, மாடுகளுக்கு தீங்கு விளைவிக்கிறது.
மேலும் கழிவுநீராக இருப்பதால் விவசாயத்திற்கு தன்மையற்ற நீராக அமைகிறது. ஆகவே தாங்கள் நேரில் பார்வையிட்டு ஏரியில் கலக்கும் கழிவுநீரை மாற்றுப்பாதையில் அமைக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
மேலும் கழிவுநீரை கலங்கல் வழியாக மாற்றியமைத்தால் ஏரி நீர் மாசுபடாமலும், மக்களுக்கு சுகாதாரமான நீரும், விவசாயத்திற்கு உகந்த நீராக கிடைக்கும். இது குறித்து உடனடியாக உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story