ஓட்டப்பிடாரம் தொகுதியில் வீடு, வீடாக சென்று மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு


ஓட்டப்பிடாரம் தொகுதியில் வீடு, வீடாக சென்று மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
x
தினத்தந்தி 30 April 2019 10:00 PM GMT (Updated: 30 April 2019 9:14 PM GMT)

ஓட்டப்பிடாரம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து மு.க.ஸ்டாலின் கிராமங்களில் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதனால் அரசியல் கட்சியினரின் தேர்தல் பிரசாரம் தீவிரம் அடைய தொடங்கி உள்ளது.

இந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் சண்முகையாவை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று மதியம் தூத்துக்குடி சென்றார். அவர் தூத்துக்குடி அருகே உள்ள ஒரு தனியார் ஓட்டலில் ஓய்வு எடுத்தார்.

மாலையில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தெற்கு சிலுக்கன்பட்டி கிராமத்துக்கு சென்றார். அங்குள்ள ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்து பொதுமக்களை சந்தித்து திண்ணை பிரசாரத்தை தொடங்கினார். அப்போது பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து வடக்கு சிலுக்கன்பட்டியில் தெருக்களில் நடந்தபடி வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

அதன்பிறகு கீழதட்டப்பாறை கிராமத்தில் பேச்சியம்மாள் என்ற மூதாட்டியின் வீட்டு திண்ணையில் சிறிது நேரம் அமர்ந்து மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் மேலதட்டப்பாறை, செக்காரக்குடி பகுதியிலும் வாக்கு சேகரித்தார்.

அப்போது, மாநில தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி., வேட்பாளர் சண்முகையா, ஓட்டப்பிடாரம் தொகுதி பொறுப்பாளர்கள் கே.என்.நேரு எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story