அரசு குடோனில் பதுக்கிய ரூ.14 லட்சம் 'பீர்' பாட்டில்கள் பறிமுதல்

சிக்கமகளூருவில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி அரசு குடோனில் பதுக்கிய ரூ.14 லட்சம் மதிப்பிலான ‘பீர்’ பாட்டில்களை கலால் துறையினர் பறிமுதல் செய்தனர்.
சிக்கமகளூரு:-
அரசு மதுபான குடோன்
கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. மேலும் வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் சார்பில் பணம், பரிசு பொருட்கள் கொடுக்கப்படுவதை தடுக்க போலீசாரும், பறக்கும் படையினரும் பல்வேறு கட்ட சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதுபோல் நேற்று சிக்கமகளூரு (மாவட்டம்) டவுனில் உள்ள கே.எஸ்.பி.சி.எல்.(அரசு) மதுபான குடோனில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட தேர்தல் நடத்தை விதிகளை மீறி அதிக அளவில் மதுபான பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.
ரூ.14 லட்சம்...
அதன்பேரில் நேற்று காலையில் கலால் துறையினர், தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசார் அந்த மதுபான குடோனுக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 700 பெட்டிகளில் 8 ஆயிரம் லிட்டர் பீர் பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.14 லட்சம் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து கலால் துறையினர் அந்த 8 ஆயிரம் லிட்டர் பீர் பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுபற்றி கலால் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
மோட்டார் சைக்கிள் பறிமுதல்
இதுபோல் மூடிகெரேவில் ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த 15 லிட்டர் மதுபான பாட்டில்கள், ஜானாப்புரா கிராமத்தில் மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்த 7 லிட்டர் மதுபான பாட்டில்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக மொத்தம் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அந்தந்த பகுதி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.






