பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழக்கு - சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு


பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழக்கு - சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு
x

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு அளிக்கிறது.

புதுடெல்லி,

இந்தியாவில் சாதி வாரியான இடஒதுக்கீட்டு முறை அமலில் உள்ளது. இந்த சாதி வாரியான இடஒதுக்கீட்டு முறை ஒவ்வொரு மாநிலத்திலும் வேறுபட்டு வருகிறது. அதாவது மாநில மக்கள் தொகைக்கு ஏற்பவும், மக்கள் முன்னேற்றம் மற்றும் மாநில அரசுகளின் விருப்பத்தின் பேரிலும் பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் சமீபத்தில் மத்திய அரசு புதிய நடைமுறையை அமல்படுத்தியது. அதாவது முன்னேறிய வகுப்பினர் அல்லது உயர்ஜாதி ஏழைகள் என்ற அடிப்படையில் பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக அரசியலமைப்பு சாசனத்தின் 103-வது பிரிவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து இந்தியாவில் முன்னேறிய வகுப்பினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் வகையில் 10 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டு நடைமுறையில் உள்ளது.

இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேவேளையில் மற்றொரு தரப்பு வரவேற்பு தெரிவித்தது. இதனால் இது பெரும் விவாதத்தை கிளப்பியது. இதற்கிடையே தான் முன்னேறிய வகுப்பினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கிய மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி யூயூ லலித், நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரவீந்திர பட், திரிவேதி, பரித்வாலா அமர்வு விசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது.

இந்நிலையில் பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்குகிறது.


Next Story