மத்திய ஆயுதப்படைகளின் 11 ஆயிரம் பழைய வாகனங்களை அழிக்க முடிவு


மத்திய ஆயுதப்படைகளின் 11 ஆயிரம் பழைய வாகனங்களை அழிக்க முடிவு
x

மத்திய ஆயுதப்படைகளின் 11 ஆயிரம் பழைய வாகனங்களை அழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

பழைய வாகனங்கள், சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவித்து வருகின்றன. எரிபொருளை அதிகமாக குடிக்கின்றன. எனவே, 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களை அழிக்கும் கொள்கையை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. மத்திய பட்ஜெட்டிலும் இக்கொள்கை அறிவிக்கப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக, எல்லை பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மத்திய தொழிலக பாதுகாப்பு படை, அசாம் ரைபிள்ஸ், இந்தோ திபெத்திய எல்லை போலீஸ், தேசிய பாதுகாப்பு படை போன்ற மத்திய ஆயுதப்படைகளின் வாகனங்களில், 15 ஆண்டுகளை கடந்த வாகனங்களை அடையாளம் காணும் பணியை மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கொண்டது. இந்த படைகளுக்கு நாடு முழுவதும் மொத்தம் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட வாகனங்கள் உள்ளன. அவற்றில் 15 ஆண்டுகளை கடந்த 11 ஆயிரம் வாகனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மத்திய அரசு கொள்கைப்படி, அந்த வாகனங்களை படிப்படியாக அழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுபோல், மாநில போலீஸ் துறைக்கு சொந்தமான பழைய வாகனங்களை அழித்துவிட்டு, சிறந்த தொழில்நுட்பமும், எரிபொருள் சிக்கனமும் கொண்ட புதிய வாகனங்களை பயன்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளையும் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.


Next Story