கர்நாடகத்தில் வனவிலங்குகள் தாக்குதலில் 11 பேர் பலி; வனத்துறை மந்திரி ஈஸ்வர் கன்ட்ரே தகவல்
கர்நாடகத்தில் இந்த ஆண்டில் இதுவரை 38 யானைகள் இறந்துள்ளதாகவும், வனவிலங்குகள் தாக்குதலில் 11 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் வனத்துறை மந்திரி ஈஸ்வர் கன்ட்ரே கூறியுள்ளார்.
பெங்களூரு:
கர்நாடகத்தில் வனவிலங்குகள் தாக்குதலை தடுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் பெங்களூரு விதானசவுதாவில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் நடந்தது. இதில் வனம்-சுற்றுச்சூழல் துறை மந்திரி ஈஸ்வர் கன்ட்ரே மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதில் வனவிலங்குகள் தாக்கியதில் மக்கள் உயிரிழப்பது பற்றியும், அதை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. பின்னர் கூட்டம் பற்றி மந்திரி ஈஸ்வர் கன்ட்ரே நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் கடந்த 15 நாட்களில் வன விலங்குகள்-மனிதர்கள் மோதலால் வன ஊழியர்கள் 2 பேர் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். மதிப்புமிக்க மனித உயிர்களை காப்பாற்ற அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது. யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்கும் வகையில் ரெயில் தண்டவாள இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்க ரூ.500 கோடி நிதி ஒதுக்குமாறு முதல்-மந்திரியிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
வனப்பகுதி குறைந்து வருவதால், விலங்குகள் ஊருக்குள் வருகின்றன. இதனால் மோதல்கள் அதிகரிக்கின்றன. இந்த முறை இயல்பை விட குறைவாக மழை பெய்துள்ளது. அதனால் காடுகளில் குடிநீர், உணவு கிடைக்காமல் விலங்குகள் ஊருக்குள் வருகின்றன. எனவே காடுகளில் விலங்குகளுக்கு குடிநீர் மற்றும் உணவு கிடைக்க தேவையான நடவடிக்கை எடுப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
யானைகள் வழித்தடத்தில் சாலை, ரெயில் பாதை, மின் கம்பங்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. யானைகளின் வழித்தடத்தை தனியார் ஆக்கிரமித்து இருந்தால் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் கல்குவாரி தொழில்கள் நடக்கின்றன. அங்கு வெடி வைத்து பாறைகள் தகர்க்கப்படுவதால் ஏற்படும் சத்தம் காரணமாகவும் விலங்குகள் ஊருக்குள் வருகின்றன.
வனப்பகுதியை ஒட்டிய இடங்களில் சட்டவிரோத கல்குவாரி தொழில்கள் நடைபெற்றால் அத்தகையவர்கள் மீதும், உடந்தையாக இருக்கும் வனத்துறையினர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாநிலத்தில் யானைகளின் தாக்குதலால் தான் அதிக இறப்புகள் ஏற்படுகின்றன. கடந்த 5½ ஆண்டுகளில் யானைகளின் தாக்குதலால் 148 பேர் உயிரிழந்துள்ளனர்.
வனப்பகுதியில் பணியில் ஈடுபட்டபோது வன ஊழியர்கள் 2 பேர் யானை தாக்குதலால் இறந்துள்ளனர். விலங்குகளால் இறப்பவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்கப்படுகிறது.
எச்.டி.கோட்டை அருகே 7 வயது சிறுவனை புலி தாக்கி கொன்றுள்ளது. அந்த பகுதிக்கு வனத்துறை அதிகாரிகளை அனுப்பி, புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்கும்படி கூறியுள்ளேன். நாட்டிலேயே கர்நாடகத்தில் தான் அதிக யானைகள் உள்ளன. அதாவது 6 ஆயிரத்து 395 யானைகள் இருக்கின்றன. யானைகளை மீண்டும் காட்டுக்குள் விரட்ட 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கர்நாடகத்தில் இந்த ஆண்டில் இதுவரை 38 யானைகள் உயிரிழந்துள்ளன.
இவ்வாறு மந்திரி ஈஸ்வர் கன்ட்ரே கூறினார்.