கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 1.16 லட்சம் கன அடி நீர் திறப்பு


கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 1.16 லட்சம் கன அடி நீர் திறப்பு
x

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 1.16 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

பெங்களூரு:

பயிர்கள் சேதம்

கர்நாடகத்தில் கடந்த மாதம்(ஜூன்) தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இந்த நிலையில் ஜூலை மாதம் தொடங்கியது முதல் மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் காவிரி, ஹேமாவதி, கபிலா, துங்கா, பத்ரா, நேத்ராவதி, பல்குனி உள்பட ஏராளமான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் ஏரிகள், குளங்கள், குட்டைகள் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளும் நிரம்பிவிட்டன.

கனமழையால் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி அருகே காவிரியின் குறுக்கே அமைந்துள்ள கிருஷ்ணராஜசாகர்(கே.ஆர்.எஸ்.) அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 123.24 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 77,154 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 82,899 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு...

இதுபோல் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி அருகே கபிலா ஆற்றின் குறுக்கே கபினி அணை அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 2284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 2282.61 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 33,700 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 33,500 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த 2 அணைகளில் இருந்தும் திறந்து விடப்பட்ட நீரானது திருமகூடலு திருவேணி சங்கமத்தில் ஒன்றாக சங்கமித்து அகண்ட காவிரியாக தமிழகம் செல்கிறது. அதன்படி நேற்று இவ்விரு அணைகளில் இருந்தும் மொத்தம் வினாடிக்கு ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 399 கன நீர் தமிழகம் செல்கிறது.

மதகுகள் பழுது

வடகர்நாடகத்திலும் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. விஜயநகர் மாவட்டம் ஒசப்பேட்டேயில் உள்ள துங்கபத்ரா அணை, யாதகிரி மாவட்டத்தில் உள்ள பசவசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

துங்கபத்ரா அணையில் உள்ள முதலாம் மதகு, 21-ம் மதகு மற்றும் 33-ம் மதகுகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படவில்லை. அந்த மதகுகள் பழுதாகி இருப்பதாகவும், அவற்றை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு இருப்பதாகவும் என்ஜினீயர்கள் தெரிவித்தனர். அணைக்கு வினாடிக்கு 1.49 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 95 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

கிருஷ்ணா ஆற்றில் வெள்ளப்பெருக்கு

கிருஷ்ணா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் விஜயநகர் மாவட்டம் ஹூவினஹடஹள்ளி தாலுகா மரகப்பி - பேலஹுன்னி கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதுதவிர கிருஷ்ணா ஆற்றின் கரையில் உள்ள ஏராளமான கிராமங்களில் வெள்ளம் புகுந்துள்ளன. ஹிரேபன்னிமட்டி, சிக்கபன்னிமட்டி, ஹரப்பனஹள்ளி, தாவரகுந்தி, நிட்டூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. பசவசாகர் அணைக்கு வினாடிக்கு 1.73 லட்சம் கன அடி தண்ணீர் அந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1.30 லட்சம் கன அடி தண்ணீர் கிருஷ்ணா ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது.

துங்பத்ரா அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரால் தாவணகெரே மாவட்டம் ஹரிஹரா தாலுகாவில் 30 கிராமங்களில் வெள்ளநீர் புகுந்தது. இதன்காரணமாக மக்கா சோளம் உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. உத்தர கன்னடா மாவட்டம் குமட்டாவில் பெய்து வரும் கனமழையால் தென்னை, வாழை பயிர்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு சேதம் அடைந்தன.

முதலைகள்

பெலகாவி மாவட்டம் சிக்கோடியில் பெய்து வரும் கனமழையால் உளியாலா என்ற கிராமத்தில் ஆற்றுப்பாலம் அடித்து செல்லப்பட்டது. பெலகாவி டவுனில் லட்சுமண் என்பவரின் வீடு இடிந்து விழுந்தது. கட்டபிரபா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 3 பாலங்கள் மூழ்கியுள்ளன. இதனால் 30 கிராமங்களுக்கு போக்குவரத்து இணைப்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டு உள்ளது.

ஹாவேரி தாலுகா சாயகுப்பி கிராமத்தில் குமாரசாமி என்பவர் வீடு இடிந்து விழுந்தது. கொப்பலில் உள்ள உலிகாம்பா தேவி கோவிலை ஆற்றுவெள்ளம் சூழ்ந்து உள்ளது. யாதகிரியில் கிருஷ்ணா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கு முதலைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. கோனாலா என்ற கிராமத்தில் ஆற்றின் கரையிலும், ஆற்றின் பாறைகளிலும் முதலைகள் அமர்ந்து உள்ளது. இதனால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.

இதுபோல் காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள் வெள்ளப்பெருக்கால் ககனசுக்கி, பரசுக்கி, சிவனசமுத்திரா உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் காவிரி கரையோர கிராமங்களுக்கும் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.


Next Story