1,175 பேர் தனியார் மருத்துவமனைகளில் அனுமதி; 793 பேர் டிஸ்சார்ஜ் - ஒடிசா சுகாதாரத் துறை


1,175 பேர் தனியார் மருத்துவமனைகளில் அனுமதி; 793 பேர் டிஸ்சார்ஜ்  - ஒடிசா சுகாதாரத் துறை
x

கோப்புப்படம்

ரெயில் விபத்தில் சிக்கிய 1,175 பேர் ஒடிசா தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

புவனேஷ்வர்,

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. முன்னதாக சென்னை நோக்கி வந்த ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டதில் இந்த பயங்கர விபத்து ஏற்பட்டது. இது அருகில் உள்ள தண்டவாளத்தில் சரக்கு ரெயிலுடன் மோதியதால் கோரமண்டல் எக்ஸ்பிரசின் பின்பக்க வண்டி மூன்றாவது பாதையில் தடம் புரண்டது. பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், மூன்றாவது பாதையில் எதிர் திசையில் இருந்து, தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 288 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒடிசா மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவல்படி, ரெயில் விபத்தில் சிக்கிய 1,175 நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 793 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர், 382 நோயாளிகள் தொடர்ந்து மருத்துவமனையில் உள்ளனர், அவர்களில் 2 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர், மீதமுள்ளவர்கள் அனைவரின் உடல்நிலை சீராக இருந்து வருவதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே விபத்தில் தடம்புரண்ட அனைத்து ரெயில் பெட்டிகளும் கிரேன் மூலம் தூக்கி நிறுத்தப்பட்டுள்ளதாக ஒடிசா தலைமைச் செயலர் தெரிவித்துள்ளார். ஒரே ஒரு பெட்டியை மீட்கும் பணி மட்டும் சற்று சவாலாக உள்ளதாகவும், தீவிரமாக பணிகள் நடைபெற்றுவருவதாகவும் அவர் கூறி இருந்தார்.

தற்போது பழுதடைந்த பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து நகர்த்தப்பட்டு, சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

முன்னதாக ஒடிசா ரெயில் விபத்தில் சிக்கி இதுவரை 288 பேர் பலியாகி உள்ளதாகவும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் 56 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் ரெயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்தது.


Next Story