பஸ் மீது லாரி கவிழ்ந்து விபத்து - 12 பக்தர்கள் பலி


பஸ் மீது லாரி கவிழ்ந்து விபத்து - 12 பக்தர்கள் பலி
x

சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பஸ் மீது சரளை கற்களை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 12 பக்தர்கள் உயிரிழந்தனர்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 59 பக்தர்கள் தனியார் பஸ்சில் உத்தரகாண்ட் மாநிலம் தனக்பூரில் உள்ள பூர்னகிரி கோவிலுக்கு ஆன்மிக சுற்றுலா சென்றுள்ளனர். கோவிலுக்கு செல்லும் வழியில் உத்தரபிரதேசத்தின் ஷாஜகான்பூர் பகுதியில் உள்ள சாலையோர உணவகத்தில் பக்தர்கள் அனைவரும் நேற்று இரவு உணவு சாப்பிட்டுள்ளனர். இதற்காக பஸ் சாலையோர பள்ளத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. சிலர் பஸ்சுக்குள் இருந்த நிலையில் சிலர் உணவகத்திற்கு சென்று சாப்பிட்டுள்ளனர்.

அப்போது, சரளை கற்களை ஏற்றிவந்த லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சரளை கற்குவியல் முழுவதும் பஸ்சில் விழுந்தன. இந்த கோர விபத்தில் பஸ்சில் இருந்த 6 பெண்கள், 3 குழந்தைகள் உள்பட 12 பக்தர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், விரைந்து வந்து பஸ்சுக்குள் சிக்கிய 9 பேரை படுகாயங்களுடன் மீட்டனர்.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய லாரி டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story