உத்தரபிரதேசத்தில் என்கவுன்ட்டர்: கோர்ட்டு உத்தரவால் 12 போலீசார் மீது வழக்கு
உத்தரபிரதேசத்தில் என்கவுன்ட்டர் தொடர்பான கோர்ட்டு உத்தரவால் 12 போலீசார் மீது வழக்கு தொடரப்பட்டது.
சகாரன்பூர்,
உத்தரபிரதேசத்தின் டியோபாண்ட் பகுதியில் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பரில் ஒரு என்கவுன்ட்டர் நடந்தது. போலீசாருக்கும், மாடு இறைச்சி கடத்தல் கும்பலுக்கும் இடையே நடந்த இந்த மோதலில் சீஷான் ஹைடர் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதையடுத்து ஹைடர் குடும்பத்தினரும், கிராமத்தினரும் போலீசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். கொல்லப்பட்டவர் அப்பாவி என்றும், பசுக்கொலை மற்றும் கால்நடை கடத்தல் வழக்கில் போலியாக சிக்க வைக்கப்பட்டு கொல்லப்பட்டார் என்றும் போராட்டம் நடத்தினர்.
ஹைடரின் மனைவி இது குறித்து கோர்ட்டில் முறையிட்டார். "விசாரணைக்கு அழைத்து சென்ற எனது கணவர் சாவுக்கு போலீசாரே காரணம். இதுகுறித்து விசாரிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். இதுகுறித்து முதல் மந்திரியின் பிரிவுக்கும் அவர் புகார் அனுப்பியிருந்தார்.
இந்த முறையீட்டில் போலீசார் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 12 போலீசார் மீது நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.